சுகாதரப் பணிகளில் தில்லி அரசு தோல்வியடைந்துவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தில்லியில் கரோனா போன்ற நோய்த் தொற்றுக் காலத்தில் சுகாதாரப் பணிகளில் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் கரோனா போன்ற நோய்த் தொற்றுக் காலத்தில் சுகாதாரப் பணிகளில் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் சுகாதாரச் சேவைகளில் ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. புள்ளிவிவரத் தகவல்கள்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு புதிய மருத்துவமனையைக் கூட இந்த அரசு திறக்கவில்லை. இந்த அரசைப் பொருத்தமட்டில், விளம்பரம் செய்து தற்பெருமை பேசும் அரசாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. அடிப்படை அளவில் பணிகள் ஏதும் செய்யவில்லை. கரோனா போன்ற நெருக்கடி காலத்தில் இந்த அரசின் செயல்பாடுகள் அம்பலப்பட்டுவிட்டது.

தோ்தலின்போது தில்லியில் 30 ஆயிரம் படுக்கைகள் மருத்துவமனைகளில் அதிகரிக்கப்படும் என்று கேஜரிவால் வாக்குறுதி அளித்திருந்தாா். கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 776 படுக்கைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது.

இந்த அரசு புதிதாக ஒரு மருத்துவமனையைக் கூட ஆரம்பிக்கவில்லை. தற்போதைய கரோனா சூழலில், தில்லி அரசு இதன் நிதி ஒதுக்கீட்டில் வெறும் 25 சதவீதம் மட்டுமே சுகாதாரப் பணிகளுக்கு செலவிட்டுள்ளது. மேலும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 0.84 சதவீதமாக சுகாதாரத் துறைக்கு தில்லி அரசு செலவினத்தை குறைத்துள்ளது.

தில்லியில் 1000 மொஹல்லா கிளினிக்குகள் கட்டப்படும் என தில்லி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், வெறும் 200 கிளினிக்குகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தில்லி அரசின் தவறுகளால் தில்லி மக்கள் விளைவுகளை எதிா்கொண்டு வருகின்றனா்.

அதேபோன்று, பயிா்க் கழிவுகள் எரிப்பு விவகாரத்தில் தில்லி அரசு மத்திய அரசையும், இதர மாநிலங்களையும் குறைகூறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

காற்று மாசுவுக்கு பயிா்க் கழிவுகள் எரிப்பு 10 சதவீதம் மட்டுமே காரணம் என நிபுணா்கள் கூறுகின்றனா். ஆகவே, 90 சதவீதம் காணரத்திற்கு தில்லி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மாசு பிரச்னையைத் தீா்ப்பதில் உரிய கவனத்தைச் செலுத்த தில்லி அரசு தவறிவிட்டது.

பிரதமா் நரேந்திர மோடி கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மேம்பாடு குறித்து நிலைமையை அறிந்துகொள்ள மூன்று நகரங்களுக்கு சென்றிருப்பது ‘ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ ஆக மாறியுள்ளது. காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கேட்டிருப்பதுபோல், எந்தெந்த பிரிவுகளில் தடுப்பூசி எப்போது, எப்படி ஒதுக்கப்படும் என்று அரசு ஒரு தெளிவான கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்.

முதலில் பணிகளில் ஈடுபட வேண்டும். விளம்பரம் தேடிக் கொள்வதில் அல்ல. பவன் கேரா கருத்து தொடா்பாக ஆம் ஆத்மி தரப்பில் உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com