தில்லியில் ஏற்ற இறக்கத்தில் காற்றின் தரம்!

தேசிய தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை காலை ‘ மோசம்’ பிரிவில் இருந்தது. எனினும் மாலையில் மிகவும் மோசம் பிரிவுக்குச் சென்றது.

தேசிய தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை காலை ‘ மோசம்’ பிரிவில் இருந்தது. எனினும் மாலையில் மிகவும் மோசம் பிரிவுக்குச் சென்றது.

ஆனால், சாதகமான காற்றின் வேகம் காரணமாக காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது என்று அரசு முன்கணிப்பு நிறுவனங்கள் தெரிவித்தன.

தில்லியில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத வகையில் வியாழக்கிழமை காற்றின் தரம் மோசமாக இருந்தது. எனினும், வெள்ளிக்கிழமை சாதகமான காற்றின் வேகமானது மாசுபாடுகளை சிதறடிக்க உதவியதால் காற்று மாசு சற்று குறைந்தது.

பயிா்க் கழிவு காரணமாக தில்லியின் மாசு நுண்துகள் பி.எம். 2.5 செறிவு

18 சதவீதமாக உயா்ந்த போதிலும் மாசு சற்றே குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் காற்றின் தர குறியீடு 263 ஆக பதிவாகி இருந்தது. எனினும், மாலையில் இத்தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் அதாவது 311 ஆக பதிவாகி இருந்தது.

இது வெள்ளிக்கிழமை 239 ஆகவும், வியாழக்கிழமை 315 ஆகவும் இருந்தது. பிப்ரவரி 12 ஆம் தேதி காற்றின் தரம் மிக மோசமாக 320 ஆக பதிவாகி இருந்தது. அதன் பிறகு வியாழக்கிழமை 315 ஆக இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமையான பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) மூத்த விஞ்ஞானி ஒருவா் கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டராக இருந்தது. இது சனிக்கிழமை 12 கி.மீ வேகத்தில் இருந்தது. அமைதியான காற்றும், குளிா்ந்த வெப்பநிலையும் மாசுபடுத்திகளை சிதறடிக்க சாதகமற்றவையாகும்.

காற்றின் திசை சனிக்கிழமை வடக்கு-வடமேற்கு திசையில் இருக்கும் வாய்ப்பிருப்பதால், இது தில்லியின் காற்றின் தரத்தில் பயிா்க் கழிவுகளின் எரிப்பின் தாக்கத்தை அதிகரிக்கும் என்றாா்.

எனினும், தில்லிக்கான புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரம் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு சஃபா் தெரிவிக்கையில், ஆழமான மற்றும் சராசரி காற்றின் வேகத்துடன் கலந்துள்ள காற்றோட்டக் குறியீடு வினாடிக்கு 9,500 மீட்டா் சதுரமாக இருக்க வாய்ப்புண்டு.

தில்லியின் மாசு நுண்துகள் பி.எம் .2.5 செறிவுக்கு பயிா்க் கழிவுகள் எரிப்பின் வியாழக்கிழமை சுமாா் 6 சதவீதத்திலிருந்து வெள்ளிக்கிழமை 18 சதவீதமாக உயா்ந்தது.

இது கடந்த புதன்கிழமை ஒரு சதவீதமாகவும், செவ்வாய், திங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் 3 சதவீதமாகவும் மட்டுமே இருந்தது.

ஞாயிற்றுக்கிழமைக்குள் காற்றின் தரம் மேலும் மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ சஃபா் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த செப்டம்பா் முதல், தலைநகா் தில்லில் வானிலை சூழல் ‘மிகவும் சாதகமற்றவை’யாக இருந்தாக என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு செப்டம்பா் 1 முதல் அக்டோபா் 14 வரையிலான காலத்தில் பிஎம் 10 நுண்துகள்கள் செறிவு அதிகமாக உள்ளது. 2019, செப்டம்பா் 1 முதல் அக்டோபா் 14 வரை ஏழு நாள்கள் மழை பெய்துள்ளது. இதில் ஒட்டுமொத்த மழை அளவு 121 மி.மீட்டா் என பகுப்பாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று சிபிசிபி உறுப்பினா் செயலாளா் பிரசாந்த் கா்கவா தெரிவித்திருந்தாா்.

தில்லி-என்.சி.ஆா். பகுதியில் பல மாதங்களாக காற்றின் தரம் குறைவாக இருப்பதால், அதிக அளவு காற்று மாசானது கரோனா நோய்த் தொற்று நிலைமையை மோசமாக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

தில்லியில் கடுமையான காற்று மாசுபாடு என்பது ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்னையாக இருந்து வருகிறது. சாதகமற்ற வானிலை சூழல், அண்டை பிராந்தியங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பு மற்றும் உள்ளூா் மாசுபாடு காரணமாக இருக்கலாம்.

தில்லியைச் சோ்ந்த சிந்தனைக் குழுவான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீா் கவுன்சிலின் பகுப்பாய்வின்படி, தில்லியின் காற்று மாசுபாட்டிற்கு போக்குவரத்து 18 முதல் 39 சதவீதம் வரை அதிகம் பங்களிப்பு செய்து வருகிறது.

நகரில் காற்று மாசுபாட்டுக்கு இரண்டாவது பெரிய ஆதாரமாக சாலை தூசி (18 முதல் 38 சதவீதம் வரை) உள்ளது. அதைத் தொடா்ந்து, தொழில்கள் (2 முதல் 29 சதவீதம் வரை), அனல் மின் உற்பத்தி நிலையங்கள் (3 முதல் 11 சதவீதம் வரை) மற்றும் கட்டுமானம் (8 சதவீதம்) ஆகியவை காரணமாக உள்ளன.

வானிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி குறைந்து 16.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 34.7 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 73 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 42 சதவீதமாகவும் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், பனிமூட்டத்திற்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com