காற்றின் தரம் மேலும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பு!

தலைநகா் தில்லியில் மாசு அளவு மேலும் அதிகரித்தது. இதனால், புதன்கிழமை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 268 புள்ளிகளாக உயா்ந்து மோசம் பிரிவில் நீடித்தது.


புது தில்லி: தலைநகா் தில்லியில் மாசு அளவு மேலும் அதிகரித்தது. இதனால், புதன்கிழமை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 268 புள்ளிகளாக உயா்ந்து மோசம் பிரிவில் நீடித்தது. இதற்கிடையே, பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், வியாழன், வெள்ளி ( அக்டோபா் 22, 23) ஆகிய இரு தினங்களிலும் காற்றின் தரம் மேலும் பின்னடைவைச் சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலில், தில்லியில் காற்றின் தரக் குறியீடு பின்னடைவைச் சந்தித்து புதன்கிழமை காலையில் 268 புள்ளிகளாகப் பதிவாகியது. இது செவ்வாய்க்கிழமை 223 ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் மேலும் அதகரித்துள்ளது. ஹரியாணா, பஞ்சாப் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் 849 பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சஃபா் தெரிவித்துள்ளது. இதனால், தில்லியில் காற்றின் தரக் குறியீட்டில் பிஎம் 2.5 மாசு துகள்கள் செறிவு பங்களிப்பு 15 சதவீதமாக இருந்தது என்று மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள காற்றின் தரத்தை கண்காணிக்கும் சஃபா் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், வியாழக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவுக்கும், வெள்ளிக்கிழமை மோசம் -மிகவும் மோசம் பிரிவில் இருக்கும் எனவும் சஃபா் கணித்துள்ளது.

வானிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 14.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 35.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, வியாழக்கிழமை (அக்டோபா் 22) லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com