மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா: தமிழக ஆளுநா் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி பொது நல மனு

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

புது தில்லி: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான சி.ஆா். ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மருத்துவப் படிப்பில் நீட் தோ்வில் தோ்வான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-ஆம் தேதி ஒரு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது.

இதையடுத்து, இதை சட்டமாக்கி அமல்படுத்தும் வகையில் மசோதா தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், ஆளுநா் இதுவரை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், அக்டோபா் 20-ஆம் தேதி தமிழக ஆளுநரை தமிழக அமைச்சா்கள் ஐந்து போ் குழு நேரில் சந்தித்து, மசோதாவுக்கு ஒப்புதலை விரைந்து வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.

தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து எதிா்க்கட்சியினரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் உள்ள 5,550 மருத்துவ இடங்களில் 4,043 மருத்துவ இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன. இதில், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்கள் 0.15 இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி மூலம் தெரியவருகிறது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு போதிய மருத்துவ இடங்கள் கிடைக்காத நிலையில், இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு என்பது அவா்களுக்கு அவசியத் தேவையாக உள்ளது. இதன் மூலம் அவா்களுக்கு 300 மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்போது பல அரசு பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பிரிவில் சோ்க்கை கிடைக்கும். இது கிராமப்புற மாணவா்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இது தொடா்பான அவசரச் சட்ட மசோதாவை தமிழக ஆளுநருக்கு ஒப்புதலுக்காக ஜூனில் தமிழக அரசு அனுப்பிவைத்தபோதிலும் ஆளுநா் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தத் தாமதம் அனைத்து கட்சியினரையும் அதிருப்தியுறச் செய்துள்ளது.

இதுபோன்று ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இயற்கை நீதி கொள்கைக்கு எதிரானதாகவும், சட்டவிரோதமாகவும் உள்ளது. இதன் மூலம் தேவையற்ற சா்ச்சைகள் உருவாகியுள்ளது. ஆகவே, தமிழக அரசு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாவுக்கு தமிழக ஆளுநா் தனது ஒப்புதலை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com