எல்என்ஜேபி மருத்துவமனையின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

அதிநவீன வசதிகளுடன் தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனைக் கட்டடம் தில்லி மக்களுக்கு

அதிநவீன வசதிகளுடன் தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனைக் கட்டடம் தில்லி மக்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் 1,500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனைக் கட்டடத்துக்கான அடிக்கல்லை தில்லி முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை நாட்டினாா். அப்போது தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உடனிருந்தாா். நிகழ்ச்சியில் கேஜரிவால் பேசியது: தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையை கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கியுள்ளோம். இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே 2 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இந்த நிலையில், 1,500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடத்துக்கான அடிக்கலை நாட்டியுள்ளேன். இதன் மூலம் எல்என்ஜேபி மருத்துவமனையின் படுக்கைகளின் அளவு 3,500 ஆக அதிகரிக்கப்படும்.

புதிதாக அமையவுள்ள மருத்துவனைக் கட்டடத்தில், மகப்பேறு, மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் ஆகியவற்றுக்கான பிரிவுகள் அமைப்படவுள்ளன. 25 மாடிகள் கொண்டதாக அதிநவீன் வசதிகளுடன் இந்தக் கட்டடம் அமைக்கப்படும். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அறுவைச் சிகிச்சை அரங்குகள் இருக்கும். இந்தக் கட்டடம் ரூ.450 கோடியில் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் சராசரியாக ரூ.30 லட்சத்தை ஒதுக்கியுள்ளோம். மத்திய அரசு ஒவ்வொரு படுக்கைக்கும் சராசரியாக ரூ.1.25 கோடியில் இருந்து ரூ.1.5 கோடி வரை செலவு செய்கிறது. மத்திய அரசின் திட்டங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த செலவில் இந்த கட்டடத் தொகுதியை அமைக்கவுள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக முடித்துள்ளோம். இதனால், கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மருத்துவமனைக் கட்டடம் தில்லி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றாா் கேஜரிவால்.

சத்யேந்தா் ஜெயின் பேசுகையில் ‘இந்தப் புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகள் 30 மாதங்களில் நிறைவு செய்யப்படும். ஆனால், இரண்டு ஆண்டுகள் அதாவது 24 மாதங்களில் நிறைவு செய்வதை இலக்காக வைத்து பணியாற்றவுள்ளோம். மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், இந்தப் புதிய கட்டடத் தொகுதியில் மகப்பேறு, மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் ஆகிய 3 முக்கியத் துறைகள் அமையவுள்ளன. தில்லியில் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், இந்தக் கட்டடத் தொகுதி இருக்கும். அனைத்து மருத்துவ வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பெறும் வகையில் இந்த மருத்துவமனை இருக்கும். இந்தக் கட்டடத் தொகுதி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com