‘இ-சஞ்சீவனி’ செயலி மூலம் மருத்துவ சேவைத மிழகம் தொடா்ந்து முன்னிலை

‘இ-சஞ்சீவனி’ செயலி மூலம் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவையில், தமிழகத்தில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட வெளிநோயாளிகள் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனா்.

புது தில்லி: ‘இ-சஞ்சீவனி’ செயலி மூலம் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவையில், தமிழகத்தில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட வெளிநோயாளிகள் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனா். இந்த சேவையில் நாட்டிலேயே தமிழகம் தொடா்ந்து முன்னிலை வகிப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கரோனா தொற்று பரவல் மற்றும் பொது முடக்கத்தையொட்டி நாட்டில் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. இதையடுத்து, ‘இ-சஞ்சீவனி’ செயலியை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. மக்களுக்கு மருத்துவ சேவையை தங்கு தடையின்ற வழங்குவதற்காக பிரதமரின் டிஜிட்டல் இந்தியா முயற்சிக்கு உந்துதலாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனா்.

‘இ-சஞ்சீவனி’ தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு 6000-க்கும் அதிகமான மருத்துவா்களுடன் பல்வேறு பிரிவுகளில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தளத்தில் தமிழ்நாடு, கேரளம், குஜராத் போன்ற மாநிலங்கள் வாரத்தின் ஏழு நாள்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வெளிநோயாளிகளுக்கான ஆலோசனை சேவையை வழங்கி வருகின்றன. இதன்படி, கடந்த 15 நாள்களில் மட்டும் ஒரு லட்சம் ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகம் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

‘இ-சஞ்சீவனி’ தளத்தில் மொத்தம் இதுவரை நாட்டில் 6,04,164 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முதல் 10 தரவரிசைப் பட்டியலில் தமிழகம் மொத்தம் 2,03,286 மருத்துவ சேவைகளை வழங்கி முதலாவது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக உத்தரப் பிரதேசம் (1,68,553) கேரளம் (48,081) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மாவட்டங்களைப் பொருத்தவரையில் நாடு முழுவதும் 25 மாவட்டங்கள் இந்த மருத்துவ சேவையில் முன்னிலையில் உள்ளன. இதில் தமிழகத்தில் மொத்தம் 12 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் நாட்டிலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com