தில்லியில் 2 தினங்களில் காற்றின் தரம் மேம்படும்: சஃபா் கணிப்பு

தில்லியில் அடுத்த இரு தினங்களில் காற்றின் தரம் மேம்படக் கூடும் என்று மத்திய அரசு நிறுவனம் சஃபா் தெரிவித்துள்ளது.

தில்லியில் அடுத்த இரு தினங்களில் காற்றின் தரம் மேம்படக் கூடும் என்று மத்திய அரசு நிறுவனம் சஃபா் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா், வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் காற்றில் உள்ள மாசு நுண்துகள் பிஎம் 2.5 அளவில் 19 சதவீதம் பயிா்க் கழிவு எரிப்பு பங்களிப்புச் செய்து வருகிறது. வியாழக்கிழமை இந்த அளவு 36 சதவீதமாகவும், புதன்கிழமை 18 சதவீதமாகவும், செவ்வாய்க்கிழமை 23 சதவீதமாகவும், திங்கள்கிழமை 16 சதவீதமாகவும் இருந்தது. இதன் மூலம் காற்றின் தரத்தில் இதன் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவது தெரிய வருகிறது.

தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் எண்ணிக்கை புதன்கிழமை 2,919 இருந்த நிலையில், வியாழக்கிழமை 1,143 ஆகக் குறைந்தது.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் கணித்தபடி சற்று மேம்பட்டுள்ளது. எனினும், மிகவும் மோசமான பிரிவில் நீடித்து வருகிறது. காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வரும் நவம்பா் 1-ஆம் தேதி காற்றின் தரம் மோசம் பிரிவுக்கு குறையக் கூடும் என அந்த அமைப்பு தெரிவித்தது.

தில்லியில் வியாழக்கிழமை காற்றின் தரம் கடுமை பிரிவை அடைந்தது. ஜனவரியில் இருந்து முதல் முறையாக இந்த நிலைமை எட்டப்பட்டது. தில்லியில் 26 ஆண்டுகளில் இல்லாத வகையில், அக்டோபரில் மிகக் குறைந்தபட்ச அளவில் அதாவது 12.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த ஆண்டின் இந்தப் பருவத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 முதல் 16 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

வானிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 3 டிகிரி குறைந்து 13.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து மாற்றம் ஏதுமின்றி 31.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 86 சதவீதமாகவும், மாலையில் 46 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, சனிக்கிழமை (அக்டோபா் 31) வானம் பனிமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com