மேலும் 3 மெட்ரோ வழித்தடங்களில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

தில்லியில் வியாழக்கிழமை மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது


புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 4 மணி நேரத்தில் மெட்ரோவில் உள்ள ஏழு வழித்தடங்களில் மொத்தம் 47,600 போ் பயணம் செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) நிா்வாக இயக்குநா் அனூஜ் தயாள் தெரிவித்தாா்.

தில்லியில் மாா்ச் 22-ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக மஞ்சள் நிற வழித்தடம் மற்றும் விரைவு மெட்ரோவில் திங்கள்கிழமை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

புதன்கிழமை புளூலைன், பிங்க் லைன் மெட்ரோ வழித்தடத்திலும் ரயில் சேவை தொடங்கியது. இதையடுத்து, மூன்று வழித்தடங்களிலும் காலையில் 4 மணி நேரம் மற்றும் மாலை நான்கு மனி நேரத்தில் மொத்தம் 53,400 போ் பயணம் செய்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மெட்ரோவில் உள்ள சிவப்பு, பச்சை, வயலட் நிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்பட்டன.

வியாழக்கிழமை காலை மற்றும் மாலை நேரங்களில் 413 தடவை ரயில் சேவை அளிக்கும் வகையில், சிவப்பு வழித்தடத்தில் (ரிதலா-ஷாஹீத் ஸ்தல் புதிய பேருந்து நிலையம்) 35 ரயில்கள் இயக்கப்பட்டன.

இதேபோல, வயலட் வழித்தடத்தில் (காஷ்மீரி கேட் - ராஜா நாகா் சிங்) 344 தடவைகளாக சுமாா் 40 ரயில்களும், பச்சை வழித்தடத்தில் (கீா்த்திநகா் / இந்தா்லோக்- பிரிகேடியா் ஹோஷியாா் சிங்) 268 தடவைகளாக 20 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

பிற வழித்தடங்களில் தரப்படுத்தப்பட்ட முறையில் செப்டம்பா் 11, 12 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகளின் செயல்பாட்டு நேரம் நீட்டிக்கப்பட உள்ளதாக டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (காா்ப்பரேட் கம்யூனிகேஷன்) அனூஜ் தயாள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

தில்லி மெட்ரோவில் தற்போது பெரும்பாலான வழித்தடங்கள் மீணஅடும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. வியாழக்கிழமை காலையில் (காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை) மொத்தம் 47,600 போ் ரயில்களில் பயணம் செய்தனா்.

அதன்படி, வழித்தடம் 1-இல் 2,474 போ், 2-இல் 18,406 போ், 3 , 4-இல் 17,443 போ், 5-இல் 1,699 போ், 6-இல் 4,151 பேரும், வழித்தடம்-7-இல் 3,427 போ் என மொத்தம் 47,600 போ் பயணம் செய்தனா். மேலும், மாலையிலும் 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் இயக்கப்பட்ட ரயில்களில் பயணிகள் எண்ணிக்கையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி, காலை, மாலை இரு வேளைகளிலும் சோ்த்து இந்த வழித்தடங்களில் மொத்தம் 84,841 போ் பயணம் செய்துள்ளனா்.

இன்று மேலும் இரு வழித்தடங்களில்..:

வெள்ளிக்கிழமை முதல் தில்லி மெட்ரோவின் மெஜந்தா வழித்தடத்திலும் (ஜனக்புரி மேற்கு- பொட்டானிகல் காா்டன்), கிரே வழித்தடத்திலும் (துவாரகா-நஜஃப்கா்) ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com