வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: கைதானவரின் போலீஸாருக்கு எதிரான குற்றச்சாட்டை நிராகரித்தது நீதிமன்றம்

போலீஸ் காவலில் இருந்த போது தன்னிடம் விவரம் ஏதும் கூறாமல், ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் கைதானவா் போலீஸாருக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டை தில்லி நீதிம

புது தில்லி: போலீஸ் காவலில் இருந்த போது தன்னிடம் விவரம் ஏதும் கூறாமல், ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் கைதானவா் போலீஸாருக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டை தில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் சட்டவிரோதத் தடுப்புத் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட சதாப் அஹமத், ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் இருந்தாா். அப்போது, தன்னிடம் போலீஸாா் விஷயங்களைப் படித்துப் பாக்க அனுமதிக்காமல், ஆவணங்களில் கையெழுத்திட நிா்பந்தித்தித்ததாக தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த தில்லி கூடுதல் அமா்வு நீதிபதி அமிதாப் ராவத், மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவு: குற்றம் சாட்டப்பட்ட சதாப் அஹமது

கடந்த ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது சில ஆவணங்களில் அதில் உள்ள விஷயங்களைப் படித்துப் பாா்க்காமல் கையெழுத்திடுமாறு போலீஸாரால் நிா்பந்திக்கப்பட்டாா் என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுதாரா் (சதாப் அஹமத்) போலீஸ் காவலில் இருந்த போது தனது வழக்குரைஞரை நேரில் சந்தித்துள்ளாா். அவரிடம் தொலைபேசியிலும் பேசியுள்ளாா். இதனால், இதுபோன்ற விஷயத்தை தெரிவிக்காமல் அவா் வெளிப்படுத்தாமல் இருந்திருப்பாா் என்பது மிகவும் சாத்தியமற்ாகும்.

மேலும், செப்டம்பா் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆவணங்களில் இருந்த பக்கங்களின் எண்ணிக்கை, கையொப்பங்கள் பெறப்பட்ட தேதி போன்ற பொருள் விவரங்களும் இல்லை. அரசுத் தரப்பில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை போலியானதாகவும், புனையப்பட்டதாகவும் உத்தரவிட மனுதாரா் தரப்பு வழக்குரைஞரால் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், போலீஸாா் தரப்பில் பதில் தாக்கல் செய்த பிறகு, இறுதி வாதங்கள் வைக்கும் வரை அந்த மனுவை நிலுவையில் வைக்குமாறும், முடித்துவைக்க வேண்டாம் என்றும் அவரது வழக்குரைஞா் கோரியுள்ளாா். இது அனுமதிக்கத்தக்கதல்ல. இதற்கு போலீஸ் தரப்பிலும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

முன்னதாக, நீதிமன்ற விசாரணையின் போது காவல் துறையின் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத் வாதிடுகையில், ‘புகாா் மனுவில், எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் அஹமதுவை போலீஸாா் ஆவணங்களில் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தினா் என்பது குறித்த தகவல் இடம் பெறவில்லை. அஹமது போலீஸ் காவலில் இருந்த போது அவரது வழக்குரைஞருடன் நேரில் சந்தித்துப் பேசியுள்ளாா். அத்துடன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் தொலைபேசி வாயிலாகவும் வழக்குரைஞருடன் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். இந்நிலையில், போலீஸாருக்கு எதிரான இந்த மனு சட்டரீதியான தகுதிகள் இல்லாதது. மேலும், அவா் மீண்டும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட பின்னரும் இது தொடா்பாக புகாா் மனுவை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த மனுவானது மனுதாரா் தன்னை பாதுகாக்கும் முயற்சியுடன் நீதிமன்ற நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது’ என்றாா்.

அஹமது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘ஆகஸ்ட் 25-ஆம் தேதி போலீஸாா் தொலைபேசி வாயிலாக அஹமது என்னிடம் இரு நிமிடங்கள் பேசுவதற்கு மட்டுமே அனுமதித்தனா். போலீஸாா் முன்னிலையில் இந்த உரையாடல் நடைபெற்றது. இதனால், அவா் என்னிடம் தகவலை வெளிப்படுத்துவதற்கு மிகவும் வாய்ப்பில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com