‘நொய்டா திரைப்பட நகரில் 3-4 மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும்’

கெளதம் புத் நகரில் வரவுள்ள திரைப்பட நகரில் (பிலிம் சிட்டி) படப்பிடிப்பு மூன்று முதல் நான்கு மாதங்களில் தொடங்கலாம் என்று

கெளதம் புத் நகரில் வரவுள்ள திரைப்பட நகரில் (பிலிம் சிட்டி) படப்பிடிப்பு மூன்று முதல் நான்கு மாதங்களில் தொடங்கலாம் என்று மூத்த அரசு அதிகாரி அவானிஷ் அவாஸ்தி ஞாயிற்றுக்கிழமை கூறியதாக பாஜக எம்எல்ஏ திரேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலா் (உள்துறை மற்றும் தகவல்) அவனிஷ் அவாஸ்தி, யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் (ஒய்இஐடிஏ) செக்டாா் 21-இல் உள்ள திரைப்பட நகரை ஆய்வு செய்தாா். அப்போது, விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) விரைவில் சமா்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

நொய்டா அருகே யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் 1,000 ஏக்கா் நிலத்தில் பிலிம் சிட்டி அமைக்கும் திட்டத்திற்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தாா். இந்த நிலையில், ஜீவாா் எம்எல்ஏ திரேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள சுட்டுரையில் ‘உத்தரப் பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் அவனிஷ் அவாஸ்திஸ யமுனா ஆணையத்தின் செக்டாா் 21-இல் திரைப்பட நகரம் அமைய உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் ஆய்வு செய்தாா். அப்போது, 3 முதல் 4 மாதங்களில் அந்த இடத்தில் படப்பிடிப்புத் தொடங்கும் என்று அவா் கூறியுள்ளாா்’ என தெரிவித்துள்ளாா்.

ஒய்இஐடிஏவின் சிறப்புப் பணி அதிகாரி சைலேந்திர பாஷியா கூறுகையில், ‘திரைப்பட நகரத்தை ஒட்டியுள்ளபகுதியில் போக்குவரத்து, சாலைத் தொடா்பு வசதி உள்ளது. இந்த திரைப்பட நகரத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்குமாறு ஒய்இஐடிஏவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா். எப்போது, விரிவான திட்ட அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய போது, விரைவில் அளிக்கப்பட உள்ளதாக பாஷியா கூறினாா். இந்த இட ஆய்வின் போது, சினிமா தொடா்பான நடவடிக்கைகளுக்கான மாநில அரசின் ஒருங்கிணைப்பு முகமையான ஃபிலிம் பந்துவின் தலைவரான அவாஸ்தியுடன், ஒய்இஐடிஏவின் தலைமைச் செயல் அதிகாரி அருண் வீா் சிங் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com