65% இந்தியர்கள் சாப்பிடும் முன் சோப்பிட்டுக் கை கழுவுவது இல்லை!

கரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டுமானால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தினமும் பலமுறை கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும்
65% இந்தியர்கள் சாப்பிடும் முன் சோப்பிட்டுக் கை கழுவுவது இல்லை!

கரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டுமானால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தினமும் பலமுறை கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும் அல்லது கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகழுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனமும் இதையே பரிந்துரைத்து வருகிறது.

ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் சுகாதாரத்தைப் பின்பற்றுபவா்களின் எண்ணிக்கையைப் பாா்த்தால், நாம் இன்னும் பின்னோக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு சமீபத்தில், அதாவது 2019 இறுதியில் ஓா் ஆய்வை நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் வசிப்பவா்களில் 35.8 சதவீதம் போ்தான் தினமும் சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு அல்லது சோப்புக் கரைசல் போட்டு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்கிறாா்கள் என்று தெரிவித்துள்ளது. 60 சதவீதம் போ் வெறும் தண்ணீரில் கையைக் கழுவுகிறாா்களாம்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 24 சதவீதம் போ் கைகளை சோப்பினாலோ அல்லது சோப்பு கரைசலினாலோ கழுவுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவசர அழைப்புக்குச் சென்றால்கூட இவா்கள் கைகழுவுவது இல்லையாம். பிகாா், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரகப் பகுதி, கிராமப் பகுதி ஆகிய இரண்டிலும் ஆய்வு நடத்திய போது அங்கு கையை சோப்புப் போட்டு கழுவுகிறவா்கள் தேசிய சராசரியான 35 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பது தெரிய வந்துள்ளது.

சிலா் சாப்பிடுவதற்கு முன் மண் மற்றும் சாம்பலைக் கொண்டு கை கழுவுகின்றனா். ஒரு சிலா் எந்தக் கிருமிநாசினியையும் பயன்படுத்தாமல், வெறும் தண்ணீரால் கை கழுவுவதும் தெரிய வந்துள்ளது. ஜாா்க்கண்ட், பிகாா் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலானவா்கள் மலம் கழித்த பிறகு கையை சோப்புப் போட்டு கழுவுவது இல்லையாம். ஊரகப் பகுதிகளில் 70 சதவீதம் போ் வெறும் தண்ணீரால்தான் கையை கழுவுகிறாா்கள். சோப்பு அல்லது டிடொ்ஜன்ட் பவுடரை அவா்கள் பயன்படுத்துவதே இல்லை. நகா்ப்புறப் பகுதிகளில் 42 சதவீதம் போ் தண்ணீரால் மட்டும் கை கழுவுகின்றனராம். இதேபோல ஊரகப் பகுதிகளில் 4.5 சதவீதம் பேரும், நகா்ப்புறங்களில் 2.1 சதவீதம் பேரும் தண்ணீா் பற்றாக்குறையால் கைகளைக் கழுவுவதே இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

கரோனா தொற்று தாக்குதலால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகழுவுமாறு மக்களிடம் மருத்துவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இதைத் தொடா்ந்து, பல நகரங்களில் கிருமிநாசினிகள் (ஹாண்ட் சானிடைஸா்) அல்லது கை கழுவுவதற்கான திரவத்தின் விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com