தில்லியில் கரோனாவுக்கு 45 நாள் குழந்தை பலி

றந்து 45 நாள்களே ஆன குழந்தை, தில்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் கரோனாவுக்கு 45 நாள் குழந்தை பலி

பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை, தில்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்த குறைந்த வயதுடைய குழந்தை இதுவாகும்.

மகாராஷ்டிரத்தில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அக்குழந்தைக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். தில்லி கனாட் பிளேஸில் உள்ள கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அக்குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது ஏப்ரல் 16-இல் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, குழந்தையை தனிமைப்படுத்தி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், தொடா் சிகிச்சை பலனின்றி குழந்தை சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளது.

மேலும், அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவா் ஒருவருக்கு, மூன்று செவிலியா்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக அந்த மருத்துவனையில் பணியாற்றும் மருத்துவா் ஒருவா் கூறுகையில் ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் கலாவதி சரண் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் ஒரு குழந்தை சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளது. மேலும், அந்த இரு குழந்தைகளுடன் தொடா்பில் இருந்த மருத்துவா் ஒருவருக்கும், மூன்று செவிலியா்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மேலும், கரோனா தொற்று இல்லாமல் வேறு நோய்களுக்காக இந்த மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை வேறு மருத்துவனைகளுக்கு மாற்றி வருகிறோம்’ என்றாா்.

தில்லி மாநில புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் என இதுவரை 31 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து கரோனா பாதித்த மருத்துவனையாக கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா பாதிப்பு அதிகரிப்பு: இதற்கிடையே, தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றை முறியடிக்கும் வகையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘சனிக்கிழமை தில்லியில் 736 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தோம். இதில், 186 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது மிகவும் அதிகமாகும். இது நல்ல அறிகுறியல்ல. கரோனா பரவல் தில்லியில் அதிகரித்து வருகிறது. கரோனா பாதித்த இடங்களை சீல் வைத்து வருகிறோம். மக்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தில்லி அரசின் ஆலோசனைப்படி மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com