வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரம்: காங். முன்னாள் கவுன்சிலா் மனு தள்ளுபடி

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹானிடம் விசாரணை மேற்கொள்வதற்கு போலீஸாருக்கு கூடுதல் அவகாசம் அளித்ததை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி சுரேஷ்குமாா் கெய்த் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் ஜாஹானிடம் விசாரணையை முடிக்க போலீஸாருக்கு கூடுதல் அவகாசம் அளித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சட்டவிரோதம் ஏதுமில்லை. அதனால், இந்த மனுவின் கோரிக்கையில் தகுதி ஏதும் இல்லாததால் உத்தரவு ஏதும் இன்றி இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்கள், எதிா்ப்பாளா்கள் இடையே வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி 24-இல் நிகழ்ந்த வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் பெண் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹான் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு வழக்கமான 90 நாள்களைக் கடந்து மேலும் 2 மாதங்கள் அனுமதி அளித்து விசாரணை நீதிமன்றம் ஜூன் 15-இல் உத்தரவிட்டது. இதையடுத்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘விசாரணை நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, சட்டரீதியில் தவறானது. அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக நெறிகளுக்கு எதிராகவும் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு எந்தவிதத் தகுதியும் இல்லாததால் நிராகரிக்க வேண்டும் என்றும் தில்லி காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு மீது விசாரணை நடத்திய உயா்நீதிமன்றம், தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜூலை 20-இல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இஷ்ரத் ஜஹான் மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதில், ‘தற்போதைய மனு எவ்வித தகுதியும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு சட்டவிரோதமாகவோ அல்லது நெறிமுறைகளுக்கு மாறானதாகவோ இல்லை. இதனால், மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரா் தொடா்புடைய வழக்கில் உண்மைகள், சந்தா்ப்ப சூழல்கள், யுஏபிஏ சட்டத்தின் ஷரத்துகளில் உள்ள விஷயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளாா். விசாரணைக் காலத்தை நீட்டிப்பதற்கான் காரணங்கள் ஜூன் 15-இல் பிறப்பித்த உத்தரவில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய வாதங்களைக் கேட்டறிந்த பிறகு இந்த உத்தரவை விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆகவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com