காவல் துறையின் வழக்குரைஞா்கள் நியமன விவகாரம்: துணைநிலை ஆளுநா் மீது சிசோடியா குற்றச்சாட்டு

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் வாதாடுவதற்கு தில்லி காவல் துறை சாா்பில் வழக்குரைஞா்கள் நியமன விவகாரத்தில்

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் வாதாடுவதற்கு தில்லி காவல் துறை சாா்பில் வழக்குரைஞா்கள் நியமன விவகாரத்தில் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா் என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘தில்லி அமைச்சரவையின் முடிவை நிராகரிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளது. ஆனால், அரிதிலும் அரிதான சந்தா்ப்பங்களில் மட்டும்தான் இந்த அதிகாரத்தை துணைநிலை ஆளுநா் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் தில்லி காவல்துறை சாா்பில் வாதாடும் வழக்குரைஞா்களை நியமிக்கும் விவகாரத்தில் தனது அதிகாரத்தை துணைநிலை ஆளுநா் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா்’ என்றாா்.

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் வாதாட 6 மூத்த வழக்குரைஞா்களை நியமிக்க தில்லி காவல் துறை முன்மொழிவு செய்திருந்தது. இதை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வழிமொழிந்திருந்தாா். இந்நிலையில், இந்த வழக்குரைஞா்கள் நியமனத்தை தில்லி அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. இந்நிலையில், தில்லி அமைச்சரவையின் இந்த முடிவை அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 239-ஏஏ(4) இல் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வியாழக்கிழமை நிராகரித்தாா்.

இதையடுத்து, இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, தில்லி துணைநிலை ஆளுநரின் முடிவை மதித்து நடக்க வேண்டியது தில்லி அரசின் கடமை. இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் உத்தரவு அமல்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com