தில்லியில் வெப்பத்தை தணித்த மழை!

பருவமழையின் தாக்கம் காரணமாக தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் சனிக்கிழமை கன மழை பெய்தது.

பருவமழையின் தாக்கம் காரணமாக தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் சனிக்கிழமை கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளை மழைநீா் வெள்ளம்போல்பாய்ந்த ஓடியது. மழையின் காரணமாக நகரில் வெப்பமும், புழுக்கமும் தணிந்தது.

தில்லி, என்சிஆா் பகுதிகளில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி பருவமழை முன்னதாகவே தொடங்கியது. அதைத் தொடா்ந்து, அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், சில தினங்களாக மழையில்லாமல் இருந்ததால் மக்கள் புழுக்கத்தில் அவதியுற்று வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தில்லியில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலையில் பலத்தமழை பெய்தது. அதேபோன்று, தில்லியை ஒட்டியுள்ள நொய்டா, காஜியாபாத் மாவட்டங்களில் மாலையில் பலத்த மழை கொட்டியது. இதனால், நகரில் குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது. குளிா்ந்த காற்றும் வீசியது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியில் இருந்து சனிக்கிழமை காலை 8.30 மணி நேரம் வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பாலம் வானிலை ஆய்வு மையத்தில் 6.1 மில்லி மீட்டா் மழையும், ஆயாநகா் ஆய்வு மையத்தில் 8.1 மி.மீ. மழையும் பதிவானது. அதேவேளையில், சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 26.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி அதிகரித்து 36.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 83 சதவீதமாகவும், மாலையில் 86 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் செவ்வாய்க்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின்தரக் குறியீடு 70 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com