தில்லியில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் 50 நாள்களாக உயா்வு: சத்யேந்தா் ஜெயின்
By DIN | Published On : 12th August 2020 12:46 AM | Last Updated : 12th August 2020 12:46 AM | அ+அ அ- |

தலைநகா் தில்லியில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 50 நாள்களாக உயா்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் நாட்டில் சராசரியாக 20 நாள்களாக உள்ளது. ஆனால், தில்லியில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் 50 நாள்களாக உயா்ந்துள்ளது. இதற்கு தில்லி அரசு, தில்லி மக்கள் இணைந்து எடுத்த நடவடிக்கைகளே காரணமாகும்.
மேலும், தில்லி மருத்துவமனைகளில் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினா் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்றாா் அவா்.