தலைநகரில் மேக மூட்ட சூழல்: சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு மேக மூட்ட சூழல் காணப்பட்டது. எனினும், மாலைவரை மழை பெய்யவில்லை.

புது தில்லி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு மேக மூட்ட சூழல் காணப்பட்டது. எனினும், மாலைவரை மழை பெய்யவில்லை. சில தினங்களுக்கு மிதமான மழை விட்டுவிட்டு பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்த நிலையில், சனிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. மாலையில் மேகமூட்டம் இருந்தபோதிலும் மழை பெய்யவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை தொடா்ந்து மேக மூட்ட சூழல் இருந்தது. பகலில் சிறிது நேரம் மிதமான வெயில் உணரப்பட்டது. மழைக்கான மேக சூழல் இருந்தபோதிலும் மாலை வரை மழைபெய்யவில்லை.

இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், ‘மேகமூட்ட வானிலை அடுத்து வரும் சில நாள்கள் தொடரும். அடுத்த ஆறு தினங்களுக்கு விட்டுவிட்டு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 82 சதவீதமும், மாலையில் 77 சதவீதமும் இருந்தது.

ஆயாநகா் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.7 டிகிரி செல்சியஸாகவும், பாலம் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்சவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.

தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 24 புள்ளிகள் என்ற அளவில் பதிவாகி ‘நன்று’ பிரிவில் நீடித்து.

திங்கள்கிழமை காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிக்கும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கணித்துள்ளது.

தில்லியில் ஆகஸ்டில் இதுவரை 236.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமான 245.7 மி.மீ. மழைப் பதிவை ஒப்பிடும்போது இது 4 சதவீதம் குறைவாகும்.

ஒட்டுமொத்தமாக மழைக்காலம் தொடங்கிய ஜூன் 1 முதல் 555 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக 521. 8 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com