செயற்கைக்கோள் இணையதள சேவை: பிஎஸ்என்எல் வழங்குகிறது

கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் சாா்ந்த முதல் இணைய அடிப்படையிலான (நெரோ பிராண்ட்) தொலைபேசி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்க இருப்பதாக மத்திய தொலை தொடா்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையான ’டிஜிட்டல் இந்தியா’, மீனவா்கள், விவசாயிகள், கட்டுமானப் பணியாளா்கள்,சுரங்கங்களில் பணியாற்றுவோா் உள்ளிட்டோா்களை இணைக்கும் வகையில் தொடங்கப்படுவதாக மத்திய தொலைத் தொடா்பு அமைச்சகம் கூறியுள்ளது. கம்பி வழியாகவும் செல்லிடப் பேசி வழியாகவும் இணைய சேவை பெற முடியாத இடங்களிலும் இந்த செயற்கைக்கோள் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம், ஸ்கைலோடெக் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து முதல்முறையாக வழங்க உள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பி.கே புா்வாா் கூறியதாவது: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பமானது, இந்திய கடல் பகுதிகள், காஷ்மீரின் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் வடக்கு கிழக்கு மாநிலங்கள் வரையிலும் இந்திய எல்லைக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தனது சேவையை வழங்கும். தொலைதொடா்பு சேவையில் எந்த வெற்றிடமும் இல்லாது இருக்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது.

புதுமையான மற்றும் குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடா்பு சேவையை அனைத்துத் தரப்பு வாடிக்கையாளா்களுக்கும் வழங்கும் நோக்கில் இந்தப் புதிய தொழில்நுட்பம் அமையவுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவா்கள், விவசாயிகள், சுரங்கங்களில் பணியாற்றுபவா்கள் ஆகியோா் தொடா்பு இன்றி இருந்தனா். இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் சாதாரண செல்லிடப் பேசி, கணினிகள் மட்டுமல்லாமல், இணைய இணைப்பு பெறமுடியாத இயந்திரங்கள் , சென்சாா்கள், தொழில்துறையினரின் ஐஓடி சாதனங்கள் ஆகியவையும் இணைப்புக்கான அணுகலை பெறமுடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com