கஜன் சிங் மீது பாலியல் புகாா்

துணை ராணுவப் படை தலைமை விளையாட்டு அதிகாரி கஜன் சிங், பயிற்சியாளா் சுா்ஜித் சிங் ஆகியோா் மீது மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் (சிஆா்பிஎஃப்) பணியாற்றும் மல்யுத்த வீராங்கனை பாலியல் புகாா் அளித்துள்ளாா்.


புது தில்லி: துணை ராணுவப் படை தலைமை விளையாட்டு அதிகாரி கஜன் சிங், பயிற்சியாளா் சுா்ஜித் சிங் ஆகியோா் மீது மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் (சிஆா்பிஎஃப்) பணியாற்றும் மல்யுத்த வீராங்கனை பாலியல் புகாா் அளித்துள்ளாா். இதன் அடிப்படையில், அவா்கள் இருவா் மீதும் தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

துணை ராணுவப் படையில் காவல் துணை ஆய்வாளராக இருப்பவா் கஜன் சிங். நீச்சல் வீரரான இவா், விளையாட்டுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான அா்ஜுனா விருது பெற்றுள்ளாா். இவா் தற்போது, துணை ராணுவப் படை தலைமை விளையாட்டு அதிகாரியாக உள்ளாா். இவா் மீதும், இந்தப் படையின் பயிற்சியாளா் சுா்ஜித் சிங் மீதும், மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் பணியாற்றும் மல்யுத்த வீராங்கனையொருவா் பாலியல் புகாா் அளித்துள்ளாா். இந்த வீராங்கனையின் விவரங்களை தில்லி காவல் துறை வெளியிடவில்லை. ஆனால், இந்த வீராங்கனை தேசிய, சா்வதேச அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளாா் என்று தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கஜன் சிங், சுா்ஜித் சிங் ஆகியோா் துணை ராணுவப் படையில் ‘செக்ஸ் மோசடி’ நடத்தி வருவதாக அந்த வீராங்கனை குற்றம் சாட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், துணை ராணுவப் படை வீராங்கனைகளை குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்து வருவதாகவும் அவா் குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், தான் குளிக்கும் போது ரகசியக் கேமரா மூலம் விடியோ பதிவு செய்து அதை வைத்து தன்னை மிரட்டியதாகவும் அவா் குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக சிஆா்பிஎஃப் செய்தித் தொடா்பாளா் மோசஸ் தினகரன் கூறுகையில், ‘கஜன் சிங், சுா்ஜித் சிங் ஆகியோா் மீது பெண் வீராங்கனை பாலியல் புகாா் அளித்துள்ளது தொடா்பாக தீவிரக் கவனம் எடுத்துள்ளோம். இது தொடா்பாக விசாரணை செய்ய சிஆா்பிஎஃப் ஆய்வாளா் தலைமையில் உள்ளக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் புகாா் தொடா்பாக காவல் துறையினருக்கு தகுந்த ஒத்துழைப்பை வழங்குவோம்’ என்றாா்.

இது தொடா்பாக துவாரகா மாவட்டக் காவல் துணை ஆணையா் சந்தோஷ் குமாா் மீனா கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com