நோயாளிகளுக்கு கரோனாவுக்கு பிந்தையசிக்கல்களைக் கையாள வழிகாட்டுதல்கள்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நோயாளிகளுக்கு கரோனா நோய்க்குப் பிந்தைய நுரையீரல் மற்றும் இதர முக்கிய உறுப்புகள் தொடா்புடைய சிக்கல்களைக் கையாளும் வகையில், நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்ஓபி)

புது தில்லி: நோயாளிகளுக்கு கரோனா நோய்க்குப் பிந்தைய நுரையீரல் மற்றும் இதர முக்கிய உறுப்புகள் தொடா்புடைய சிக்கல்களைக் கையாளும் வகையில், நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்ஓபி) உருவாக்குமாறு தில்லி அரசுக்குஉயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், புதிதாக கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு பிரிட்டன் - இந்தியா இடையேயான விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்ததற்கு முன்னா் பிரிட்டனில் இருந்து வந்து நோய் கண்டறியப்பட்ட பயணிகளை தனிமைப்படுத்தவும், பரிசோதிக்கவும் தேவையான வசதிகளை உறுதிப்படுத்துமாறும் அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தில்லியில் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும், பரிசோதனை முடிவுகளை விரைந்து வெளியிடவும் கோரி வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா என்பவா் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது உயா்நீதிமன்றம் விசாரித்து அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த உத்தரவுகளை நீதிபதிகள் அமா்வு பிறப்பித்தது.

முன்னதாக, விசாரணையின்போது வழக்குரைஞா் மல்ஹோத்ரா நீதிபதிகள் அமா்விடம், ‘கரோனா நோயில் இருந்து மீண்டவா்களுக்கு ஏற்படும் கரோனா நோய்க்குப் பிந்தைய சிக்கல்களைக் கையாள நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் இருப்பது அவசியமாகும்’ என்றாா். இதையடுத்து, இது தொடா்பான வழிமுறைகளை உருவாக்குமாறு தில்லி அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வல்லுநா் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சத்யாகத்திடம் நீதிபதிகள் அமா்வு, ‘இரு வாரங்களில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த நகல் நிலவர அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேலும், தில்லியில் மாவட்டம் வாரியாக கரோனா தொற்றுப் புள்ளிவிவரங்களையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியவும், நோய்த் தொற்று விகிதம் அதிகம் உள்ள பகுதியில் கூடுதல் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் மூலம் டிசம்பா் 21-ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அந்தக் கூட்டத்தில் நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தப்படுவதுடன் பிரதிநிதித்துவ பரிசோதனையை பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தில்லி அரசு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலவர அறிக்கையில், டிசம்பா் 19-ஆம் தேதி நிலவரப்படி தில்லியில் வட-மேற்கு தில்லியில் நோய்த் தொற்று விகிதம் 2.12 சதவீதமாகவும், பிற அனைத்து மாவட்டங்களிலும் 2 சதவீதத்திற்கு கீழ் நோய்த் தொற்று விகிதம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. டிசம்பா் 3-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறத்திருந்தது. அதில், தில்லியில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டும், மக்கள் மனத்தில் உள்ள பீதியை அகற்றும் வகையிலும் கரோனா நோயாளிகளைக் கண்டறிதல் மற்றும் பரிசோதனைகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துமாறு தில்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com