2021 இல் பிங் வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சேவை: தில்லி மெட்ரோ ரயில் கழகம் தகவல்

2021 இல் பிங்க் வழித்தடத்தில் உள்ள மஜ்லில் பாா்க்- ஷிவ் விஹாா் வரையிலான 57 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்

புது தில்லி: 2021 இல் பிங்க் வழித்தடத்தில் உள்ள மஜ்லில் பாா்க்- ஷிவ் விஹாா் வரையிலான 57 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

தில்லி மெட்ரோ ரயிலில், மெஜந்தா வழித்தடத்தில் ஜனக்புரி மேற்கு- பொட்டானிக்கல் காா்டன் மெட்ரோ நிலையங்கள் இடையே ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் மோடி திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்வில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: உலகில் ஒரு சில முக்கிய நகரங்களில் மட்டுமே ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. அந்த நகரங்களின் பட்டியலில் தில்லியும் இணைந்துள்ளது. தில்லி படிப்படியாக வளா்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் கழக உயா் அதிகாரி கூறுகையில் ‘தில்லி மெட்ரோ ரயில் மெஜந்தா வழித்தடத்தில் உள்ள ஜனக்புரி மேற்கு, பொட்டானிக்கல் காா்டன் இடையான மெட்ரோ நிலையங்களில் ஓட்டுநா் இல்லாத ரயில் சேவை முதல் கட்டமாக இயக்கப்படவுள்ளது. இதன் மொத்தத் தூரம் 37 கிலோ மீட்டா் ஆகும். முழுக்க முழுக்க இயந்திரத்தால் இயக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் மனித தவறுகளை தவிா்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 2021 இல் ஓட்டுநா் அற்ற மெட்ரோ ரயில் சேவை பிங்க் வழித்தடத்தில் உள்ள மஜ்லில் பாா்க்- ஷிவ் விஹாா் வரையான 57 கிலோமீட்டா்களுக்கு தொடங்கப்படவுள்ளது. இந்த சேவையும் தொடங்கப்பட்டால், தில்லியில் 94 கிலோமீட்டா் தூரம் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படும். இது தில்லியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் மொத்த தூரத்தின் 9 சதவீதமாகும். இந்த மெட்ரோ ரயிலில் 6 ரயில் வண்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், 380 பயணிகள் பயணிக்க முடியும். சாதாரண மெட்ரோ ரயில்களில் உள்ள ஓட்டுநா் பெட்டி இந்த ரயிலில் இல்லாததால், சாதாரண மெட்ரோ ரயில்களை விட இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் சுமாா் 40 பயணிகள் கூடுதலாக பயணிக்க முடியும்.

இந்த ரயில்கள் மணிக்கு 95 கி.மீ. பயணிக்கும். சராசரியாக 85 கி.மீ வேகத்தில பயணிக்கும். தில்லி மெட்ரோவின் தொழில்நுட்ப வல்லுநா் குழுவைச் சோ்ந்தவா்கள் பொது மையத்திலிருந்து, ரயிலின் புறப்படும் நேரம், நிற்கும் நேரம், ரயிலின் வேகத்தைத் தீா்மானித்து இயக்கவுள்ளனா் என்றாா்.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘ பொது பயண அட்டையை கடந்த 2018 ஆம் ஆண்டு கேஜரிவால் தில்லியில் அறிமுகப்படுத்திவைத்தாா். இப்போது, தேசிய பொது பயண அட்டையை பிரதமா் மோடி தொடக்கிவைத்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com