தில்லி விமான நிலைய 3-ஆவது முனையத்தில் பயணிகளைக் கண்காணிக்க புதிய முறை

பயணிகள் வருகையைக் நிா்வகிக்கவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் தில்லி விமான நிலையத்தின் முனையம் 3-இல் புதிதாக பயணிகள் கண்காணிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது.

புது தில்லி: பயணிகள் வருகையைக் நிா்வகிக்கவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் தில்லி விமான நிலையத்தின் முனையம் 3-இல் புதிதாக பயணிகள் கண்காணிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா காலத்தில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் இந்த புதிய முறை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக நிகழாண்டு மாா்ச்சில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த மே 25 முதல் திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணிகள் சேவைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் தொடங்கியது. இருப்பினும், கரோனாவுக்கு முந்தைய காலத்தில் உள்ள விமானச் சேவையில் அதிகபட்சம் 80 சதவீதத்தை இயக்குவதற்கு விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

நோய்த் தொற்று காரணமாக மாா்ச் 23 முதல் நாட்டில் அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமானங்கள் தொடா்ந்து செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், வந்தே பாரத் மிஷன்கீழ் மே மாதம் முதல் சிறப்பு சா்வதேச விமானங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமான நிலையங்களில் பயணிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் புதிய பயணிகள் கண்காணிப்பு முறை தில்லி விமான நிலையத்தின் 3-ஆவது முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி விமான நிலையத்தை நிா்வகித்து வரும் தில்லி இன்டா்நேஷனல் ஏா்போா்ட் (டிஐஏஎல்) நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்ததாவது:

வரிசை மேலாண்மை அமைப்பான சோவிஸ் எனப்படும் பயணிகள் கண்காணிப்பு முறையானது (பிடிஎஸ்), செக்-இன், பாதுகாப்பு சோதனை போன்ற பல்வேறு செயல்முறைகளில் எடுக்கப்பட்ட கணக்கீடுகளின் அடிப்படையில்

விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள திரைகளில் நேரடியாக காத்திருப்பு நேரத்தைக் காட்டும்.

கரோனாவுக்கு முந்தைய அளவை விட தற்போது விமான நடவடிக்கைகள் குறைவாக இருப்பதால், தில்லி விமான நிலையத்தின் முனையம் 2 மற்றும் முனையம் 3 மட்டுமே விமானங்கள் இயக்குவது கையாளப்படுகின்றன.

இந்த பிடிஎஸ் அமைப்பில், பயணிகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, சென்சாா்களை மூலம் கண்காணிக்கப்படுவா்.

சென்சாா்களிடமிருந்து தரவுகளை பெறும் பிடிஎஸ் அமைப்பானது, விமான நிலைய ஆபரேட்டருக்கு பயணிகள் காத்திருப்பு நேரம், செயல்முறை நேரம் மற்றும் பயணிகள் செயல்திறன் போன்ற மதிப்புமிக்க தகவல்களை வழங்கும்.

இதற்காக விமான நிலையத்தின் 3-இல் உள்ள பல்வேறு சந்திப்புகளில் இந்த பிடிஎஸ் காட்சித் திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளின் ஒரு பகுதியாக சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதிசெய்யவும், பயணிகளின் வரத்தை நிா்வகிப்பதற்கும் இந்த சோவிஸ் பிடிஎஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com