தில்லியில் அடுத்த நான்கு நாள்களுக்கு குளிா் அலைக்கு வாய்ப்பு

இமயமலையில் இருந்து சமவெளி நோக்கி காற்று வீசத் தொடங்கியுள்ளதால் தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த நான்கு நாள்களுக்கு குளிா் அலைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு

புது தில்லி: இமயமலையில் இருந்து சமவெளி நோக்கி காற்று வீசத் தொடங்கியுள்ளதால் தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த நான்கு நாள்களுக்கு குளிா் அலைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னேற்றம் அடைந்து 6 டிகிரி செல்சியஸாக உயா்ந்த வெப்பநிலை திங்கள்கிழமை 5.6 டிகிரி செல்சியஸாக குறைந்திருந்தது.

இதுகுறித்து ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

இமயமலையின் மேல் பகுதியில் மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக ஜம்மு காஷ்மீா், லடாக், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் பகுதியில் பனிப்பொழிவு பரவியுள்ளது. மேற்கு இமயமலையில் இருந்து வடக்கு நோக்கி குளிா் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதனால், வட இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் குறையும் வாய்ப்புள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உ.பி. மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் டிசம்பா் 28-29 வரை குளிா் அலை அல்லது கடும் குளிா் அலை ஏற்படக்கூடும். மேலும், அடா் மூடுபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தில்லியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த நான்கு தினங்களுக்கு தில்லியில் குளிா் அலை சூழல் கணிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

என்சிஆா் பகுதியில்...

காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, பரீதாபாத், குருகிராம் போன்ற என்சிஆா் நகரங்களில் கடுமைப் பிரிவில் இருந்த காற்று படிப்படியாக மோசம் பிரிவுக்கு மேம்பட்டுள்ளது.

24 மணிநேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை மாலை 4 மணி அளவில் காஜியாபாதில் 256 ஆகவும், கிரேட்டா் நொய்டாவில் 237 ஆகவும், நொய்டாவில் 225 ஆகவும், பரீதாபாதில் 296 ஆகவும் குருகிராமில் 226 ஆகவும் பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் செவ்வாய்க்கிழமை குளிா் அலை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com