பிரிட்டன் விமானங்களுக்கு ஜன.7 வரை தடை நீட்டிப்பு

பிரிட்டனிலிருந்தும் அந்த நாட்டின் வழியாகவும் இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானங்களின் சேவைகளையும் ரத்துச் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஜனவரி 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் 
பிரிட்டன் விமானங்களுக்கு ஜன.7 வரை தடை நீட்டிப்பு

புது தில்லி: பிரிட்டனிலிருந்தும் அந்த நாட்டின் வழியாகவும் இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானங்களின் சேவைகளையும் ரத்துச் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஜனவரி 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி புதன்கிழமை தெரிவித்தாா்.

இதற்கிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 23 முதல் சா்வதேச விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. எனினும் தோ்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் நிலைமைக்கு ஏற்ப அரசின் உத்தரவுப்படி விமான சேவை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உருமாறிய கரோனா தொற்று பிரிட்டனில் வேகமாகப் பரவியதையடுத்து, அந்த நாடு தொடா்புடைய விமான சேவைகளை மத்திய அரசு டிசம்பா் 31 - ஆம் தேதி வரை ரத்து செய்திருந்தது. உருமாறிய கரோனா தொற்று இந்தியாவில் 20 பேருக்கு புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதில் அதிகபட்சம் தில்லியில் 8 பேரும், பெங்களூருவில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதை முன்னிட்டு சுகாதாரச் சேவை இயக்குநா் ஜெனரல், தலைமையிலான இணைக் கண்காணிப்புக் குழுவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் இயக்குநா் ஜெனரல் தலைமையிலான தேசியப் பணிக் குழு வும் அவசரமாக புதன்கிழமை கூடியது. இந்தக் குழுக்கள் மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 7-ஆம் தேதி வரை நீட்டிக்குமாறு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தை மத்திய சுகாதாரத் துறை செயலாளா் ராஜேஷ் பூஷண் கேட்டுக் கொண்டிருந்தாா். ஜனவரி 7-ஆம் தேதிக்குப் பிறகும் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு குறைந்த அளவிலான விமானங்களை, கடுமையான கண்காணிப்புக்குப் பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும் அவா் பரிந்துரைத்திருந்தாா். இதை ஏற்றுக் கொண்ட சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7 -ஆம் தேதி வரை நீடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

மாநில அரசுகளுக்குக் கடிதம்: இதற்கிடையே, உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்படும் அனைத்து நிகழ்வுகளையும் தீவிரமாகக் கண்காணிக்கும்படி மாநில சுகாதாரத் துறை செயலாளா்களுக்கும் மத்திய சுகாதாரச் செயலாளா் ராஜேஷ் பூஷண் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். வரவிருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், அதனுடன் தொடா்புடைய நிகழ்வுகளின் போது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துமாறும், அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களை அவா் கடிதத்தில் கேட்டுக்் கொண்டுள்ளாா்.

உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், கரோனா பரிசோதனை, தனிமைப்ப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை அனைத்து விமான நிலையங்களிலும், மாவட்டங்களிலும் பின்பற்றவும் மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தி கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உள்ளூா் கட்டுப்பாடுகளை விதிக்கவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com