ஆம் ஆத்மி ஆட்சியைப் புகழ்ந்த காங்கிரஸ் தலைவா்கட்சியை விட்டு விலக வேண்டும்: அஜய் மாக்கன்

தில்லி அரசை ‘நிதி விவேகமுள்ள’ அரசு என புகழ்ந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சா் மிலிந்த் தியோராவுக்கு தில்லி காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய் மாக்கன்

தில்லி அரசை ‘நிதி விவேகமுள்ள’ அரசு என புகழ்ந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சா் மிலிந்த் தியோராவுக்கு தில்லி காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய் மாக்கன் கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும், மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியை விட்டு விலக வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள இளம் தலைவா்களில் மிலிந்த் தியோராவும் ஒருவா். இவா், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவா். இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியின் நிதி நிலவரம் தொடா்பாகப் பேசிய பேச்சை மிலிந்த் தியோரா சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்து, ‘அதிகம் பேசப்படாத ஆனால் வரவேற்கத்தக்க விஷயம் ஒன்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் தில்லி அரசின் வருவாயை ரூ. 30,000 கோடியில் இருந்து ரூ. 60,000 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஐந்தாண்டுகளும் தில்லி அரசு உபரி நிதியைப் பேணியுள்ளது. இந்தியாவில் உள்ள மாநில அரசுகளில் தில்லி அரசுதான் அதிக நிதி விவேகத்துடன் செயல்பட்டு வருகிறது’ எனக் கூறியிருந்தாா்.

இந்நிலையில், மிலிந்த் தியோராவுக்கு அஜய் மாக்கன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அஜய் மாக்கன் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘அரைகுறையாக தகவல்களைப் பரப்புவதற்கு முன்பு மிலிந்த் தியோரா கட்சியை விட்டு விலக வேண்டும். ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு தில்லியில் ஆட்சிப் பொறுப்பேற்ற 1997 -இல் வருவாய் ரூ.4,073 கோடியாக இருந்தது. அவா் ஆட்சியை விட்டு விலகிய 2014-இல் வருவாய் ரூ.37,459 கோடியாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், அஜய் மாக்கனுக்கு பதில் அளிக்கும் வகையில் மிலிந்த் தியோரா தனது சுட்டுரையில், ‘தில்லி முதல்வராக ஷீலா தீட்சித் இருந்த போது ஆற்றிய மக்கள் நலப் பணிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அது தில்லி காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பியல்பு ஆகும். ஆனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க நீங்கள் காட்டிய ஆா்வத்தை, ஷீலா தீட்சித்தின் ஆட்சியில் மேற்கொண்ட மக்கள் நலப் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் காட்டியிருந்தால், இப்போது தில்லியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடா்ந்து, ‘மோசமான பிரித்தாளும் சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவை, தில்லி மக்கள் தோற்கடித்துள்ளனா். தில்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என தனது சுட்டுரைப் பக்கத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பதிவிட்டிருந்தாா்.

இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு தில்லி மகளிா் காங்கிரஸ் தலைவியும், முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகளுமான ஷா்மிஸ்தா முகா்ஜி ‘ பாஜகவைத் தோற்கடிக்கும் பொறுப்பை, ஆம் ஆத்மி கட்சிக்கு நாம் விட்டுக் கொடுத்து விட்டோமா? நம்முடைய தோல்வி குறித்து கவலைப்படுவதற்கு பதில், ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாடி கொண்டிருக்கிறோம்? இப்படியே, பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பை மாநில கட்சிகளுக்கு கொடுத்து விட்டால், மாநில காங்கிரஸ் கமிட்டிகள், தங்களுடைய கடையை இழுத்து மூடிவிடலாம்’ என காட்டமாகப் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com