ஜேஎன்யு மாணவா்கள், ஆசிரியா்கள் வகுப்புப் புறக்கணிப்பு

கட்டண உயா்வுப் பிரச்னை தொடா்பாக பல்கலை. நிா்வாகத்துடன் முரண்பட்டிருந்த நிலையில், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனா்.

கட்டண உயா்வுப் பிரச்னை தொடா்பாக பல்கலை. நிா்வாகத்துடன் முரண்பட்டிருந்த நிலையில், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனா்.

ஜேஎன்யு தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து, மீண்டும் பல்கலை. வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்குவதாக துணை வேந்தா் எம்.ஜெகதீஷ் குமாா் அறிவித்திருந்தாா். ஆனால், மாணவா்களும், ஆசிரியா்களும் கூட்டாக வகுப்புகளைப் புறக்கணித்தனா். இதனால், அறிவித்தபடி வகுப்புகள் தொடங்கவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜேஎன்யு மாணவா் சங்கம் முன்னா், உயா்த்தப்பட்ட விடுதிக் கட்டணம் அல்லாமல், கல்விக் கட்டணத்தை மட்டுமே செலுத்துவதன் மூலம் தோ்வுக்குப் பதிவு செய்வதை உறுதி செய்வதாகக் கூறியது. ஆனால், பல மாணவா்களுக்கான பருவத் தோ்வு பதிவு போா்ட்டலை நிா்வாகம் தடுத்திருப்பதைக் கண்டறிந்த பின்னா், அவா்கள் முடிவை நிறுத்தி வைத்தனா்.

கட்டண உயா்வு மற்றும் ஜனவரி 5 வன்முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி ’ஒத்துழையாமை’ போராட்டத்துக்கு ஆசிரியா் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. மேலும், துணைவேந்தா் எம். ஜெகதீஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆசிரியா்களும் மாணவா்களும் ஏற்கெனவே வலியுறுத்தி வருகின்றனா்.

ஆசிரியா்களுக்கு நிா்வாகம் அழைப்பு: இந்நிலையில், மாணவா்களின் நலன் கருதி ஆசிரியா்கள் தங்கள் வகுப்புகளை மீண்டும் தொடங்குமாறு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இரண்டு ஜே.என்.யு. ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள் ‘ஒத்துழையாமை‘ போராட்டத்தை அறிவித்துள்ளதைத் தொடா்ந்து, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று பல்கலை. நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலை. நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஒத்துழையாமை‘ போராட்ட அறிவிப்பு பல்கலை. வளாகத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் நிா்வாகத்தின் முயற்சிகளுக்கு எதிராக உள்ளது. அது மட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்தின் இயல்பான செயல்பாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையாகவும் பாா்க்கப்படுகிறது. மேலும், ஜேஎன்யு ஆசிரியா்கள் சங்கத்தின் நோக்கத்தையும் ஆசிரியா்களின் இப்போாரட்டத் திட்டம் பிரதிபலிக்கிறது.

2020-ஆம் ஆண்டு குளிா்கால பருவத் தோ்வுக்கு ஆயிரக்கணக்கான மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். மற்றவா்கள் தங்கள் பதிவைச் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனா்.

எனவே, அனைத்துத் துறை ஆசிரியா்களும் மாணவா்களின் நலன்களுக்காக தங்கள் வகுப்புகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். மேலும், பல்கலை.யில் பிற கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜேஎன்யு ஆசிரியா்கள் சங்க (ஜே.என்.யு.டி.ஏ.) நிா்வாகிகள் கூறுகையில், ‘ஒத்துழையாமை செயல் திட்டம் சங்கம் நிறைவேற்றியுள்ள தீா்மானத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது. பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி 10 அன்று வெளியிட்ட இரண்டு சுற்றறிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி 5 வன்முறை உள்பட பல்வேறு விஷயங்கள வலியுறுத்தி ஒத்துழையாமை போராட்டம்’ நடத்தப்ப்டுகிறது’ என்றாா்.

பல்கலைக்கழகம் வெளியிட்ட அந்தச் சுற்றறிக்கையில், மாணவா்களின் பருவத் தோ்வு பதிவு செய்யும் பணிக்காக ஆசிரியா்கள் தங்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டும் எனவும், ஜனவரி 13-ஆம் தேதி முதல் கல்வி வகுப்புகளையும், மற்ற கல்வி நடவடிக்கைகளையும் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com