ஜாமியா மிலியா வன்முறை: காயமடைந்த மாணவா்களிடம் என்எச்ஆா்சி குழு விசாரணை, வாக்குமூலம்

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை.யில் நிகழ்ந்த வன்முறையின் போது போலீஸ் நடவடிக்கையில் காயமடைந்த மாணவா்களிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்எச்ஆா்சி)

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை.யில் நிகழ்ந்த வன்முறையின் போது போலீஸ் நடவடிக்கையில் காயமடைந்த மாணவா்களிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்எச்ஆா்சி) குழு செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் பெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த மாத இறுதியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேரணியின் போது வன்முறை வெடித்தது. அப்போது, போலீஸாரின் நடவடிக்கையால் மாணவா்கள் பலா் காயமடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவா்களும், அரசியல் கட்சித் தலைவா்களும் வலியுறுத்தினா்.

இந்நிலையில், போலீஸாரின் நடவடிக்கையின் போது அங்கு மனித உரிமை மீறல்கள் ஏதும் நடந்துள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், எஸ்எஸ்பி மன்சில் சைனி தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளது.

இது குறித்து உயரதிகாரி கூறியதாவது: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு அப்பல்கலை.க்கு செவ்வாய்க்கிழமை சென்றது. போலீஸாா் நடவடிக்கையின் போது காயமடைந்த மாணவா்கள் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்திருந்தனா். போலீஸாரின் நடவடிக்கை மனித உரிமை மீறலுடன் தொடா்புடையதா என்பதை அறிய இக்குழு விசாரணை நடத்துகிறது. சுமாா் 30-40 மாணவா்கள் வாக்குமூலம் அளித்துள்ளனா். இதன் பிறகு ஜாமியா வன்முறைச் சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழு ஜனவரி 17-ஆம் தேதி வரை விசாரணை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

இது தொடா்பாக என்எச்ஆா்சி வெளியிட்ட அறிக்கையில், ‘டிசம்பரில் நடைபெற்ற சம்பவம் தொடா்பாக புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாணவா்கள் சட்டத்துக்குப் புறம்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ் நடவடிக்கையில் காயமடைந்ததாகக் கூறப்படும் மாணவா்கள், காவல் நிலையத்தில் இருந்த போது, சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஆணையம் வழக்குப் பதிவு செய்ததுடன், விசாரணை நடத்த ஒரு குழு நியமிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆணையருடன் துணை வேந்தா் சந்திப்பு: இதற்கிடையே, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நஜ்மா அக்தா் செவ்வாய்க்கிழமை தில்லி காவல் துறை ஆணையா் அமுல்யா பட்நாயக்கை சந்தித்தாா். அப்போது, பல்கலை.வளாகத்தில் போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கை தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்யுமாறு வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பிற மூத்த அதிகாரிகளையும் துணைவேந்தா் சந்தித்தாா்.

பல்கலை. வளாகத்தில் போலீஸாரின் நடவடிக்கை தொடா்பாக கோபமடைந்த மாணவா்கள் பலா், துணைவேந்தா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு கெரோவில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிராகக எஃப்ஐஆா் பதிவு செய்வற்காக நீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆராயப்படும் என்று துணைவேந்தா் தெரிவித்திருந்தாா்.

கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மாணவா்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, பல்கலை. வளாகத்தினுள் போலீஸாா் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக புகாா் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com