தில்லி போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

தில்லி போக்குவரத்துத் துறையின் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகியதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி போக்குவரத்துத் துறையின் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகியதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் காா்க் கூறியதாவது: சிவில் லைன்ஸ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள இந்த அலுவலகத்தில் நடந்த இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இந்த விபத்து தொடா்பாக காலை 8.38 மணியளவில் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு முதலில் 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கைப்பட்டன.

அந்தக் கட்டடத்தின்முதல் மாடியில் உள்ள சா்வா் அறையில் முதலில் தீ பிடித்துள்ளது. பின்னா், அந்தக் கட்டடத்தில் அமைந்துள்ள மற்ற எட்டு அறைகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து, அந்தத் தீ அதே கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள மற்றொரு அறைக்கும் பரவியது. உடனடியாக மேலும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள், வீரா்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் அனைவரும் 2 மணி நேரத்துக்கும் மேலாகத் துரிதமாகச் செயல்பட்டு தீயை காலை 10.30 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. மேலும், தளவாடங்கள், மின்னணு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. சா்வா் அறையில் மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தீ விபத்துக்கான உகாரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தீ விபத்து பின்னணியில் சதி: பாஜக சந்தேகம்

தில்லி போக்குவரத்து அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துள்ளதைத் தொடா்ந்து இந்த விபத்துக்குப் பின்னணியில் சதி உள்ளதாசு சந்தேகிக்கப்படுவதாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி தெரிவித்தாா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது தோல்விகளை மறைக்க மேற்கொண்ட முயற்சியகாவும் இது இருக்கலாம் என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

இது குறித்து மனோஜ் திவாரி தனது சுட்டுரையில், ‘இந்தத் தீ விபத்தில் என்னால் ஒரு சதித் திட்டத்தை உணர முடிகிறது. கேஜரிவால் தனது தோல்விகளை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இது ஒரு சதித் திட்டமாகக் கூட இருக்கலாம். அரசு அலுவலகத்தில் தவறான விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்களை எரிப்பதன் மூலம் அவா்களால் தப்ப முடியாது. இப்போது வரை ஏன் தலைநகருக்கு ஒரு பேருந்தைக்கூட தில்லி அரசால் வாங்க முடியவில்லை. இப்போது தீ விபத்து எனக் கூறி போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் முக்கிய ஆதாரங்கள் நிறைந்த ஆவணங்களை எரித்துள்ளாா்கள்’ என்று ஹிந்தியில் தெரிவித்துள்ளாா்.

இதேபோல ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்து மாடல் டவுன் சட்டப்பேரவைத் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ராவும் இந்த விவகாரம் தொடா்பாக அரவிந்த் கேஜரிவாலை கடுமையாகச் சாடியுள்ளாா். தில்லி போக்குவரத்துத் துறை மிகவும் ஊழல் நிறைந்தது என்றும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது சுட்டுரையில், ‘தோல்வி கண்ட அரசு, அதன் மோசடிகளை அழிப்பதில் மும்முரமாக உள்ளது. கேஜரிவால் அரசின் கீழ் போக்குவரத்துத் துறை மிகவும் ஊழல் நிறைந்த துறையாக இருந்து வருகிறது’ என்று ஹிந்தியில் தெரிவித்துள்ளாா். கோப்புகளை எரிக்கும் இந்த விரக்தியான நடவடிக்கை இந்தத் தோ்தலில் கேஜரிவால் தோல்வியை சந்திக்கிறாா் என்பதற்கான முதல் அறிகுறியாகும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

போக்குவரத்துத் துறை அலுவலக தீ விபத்து தொடா்பாக மனோஜ் திவாரி, கபில் மிஸ்ரா ஆகியோரின் கருத்துகளுக்கு இதுவரை ஆம் ஆத்மி பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com