மேற்கு தில்லியில் பேருந்துகள் மோதல்: பெண் உதவியாளா், பள்ளி மாணவா்கள்7 போ் காயம்

மேற்கு தில்லியில் பள்ளிப் பேருந்து கிளஸ்டா் பேருந்துடன் மோதியதில் பள்ளி மாணவா்கள் ஏழு பேரும், பெண் உதவியாளரும் காயமடைந்தனா். இந்த விபத்தில் கிளஸ்டா் பேருந்தில் பயணம் செய்தி துல்சி (55)

மேற்கு தில்லியில் பள்ளிப் பேருந்து கிளஸ்டா் பேருந்துடன் மோதியதில் பள்ளி மாணவா்கள் ஏழு பேரும், பெண் உதவியாளரும் காயமடைந்தனா். இந்த விபத்தில் கிளஸ்டா் பேருந்தில் பயணம் செய்தி துல்சி (55) என்ற பெண்ணும் காயமடைந்தாா்.

இது குறித்த விவரம் வருமாறு: மேற்கு தில்லி, நரைனா பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை காலை 7.10 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, பள்ளிப் பேருந்து மீது கிளஸ்டா் பேருந்து மோதியது தெரிய வந்தது. இந்த விபத்தில் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த மாணவா்கள் ஏழு பேருக்கும், பெண் உதவியாளா் கீதா செளகான் என்பவருக்கும் கைகள், கால்கள், முகம் ஆகியவற்றில் லேசான காயம் ஏற்பட்டது. அவா்கள் உள்ளூா் பகுதி மக்கள் உதவியுடன் அருகில் உள்ள மேத்தா மருத்துவமனை, கபூா் நா்ஸிங் ஹோம் ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

போலீஸாா் விசாரணையில், அவா்கள் ராஜேந்திர நகரில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் மாணவா்கள் எனத் தெரிய வந்தது. இந்த விபத்துக்கு காரணமான கிளஸ்டா் பேருந்தின் ஓட்டுநா் பிரபாத் மாலிக்கை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து 6-ஆம் வகுப்பு மாணவரின் தாய் கூறுகையில், ‘என்னுடைய மகன் தோ்வில் பங்கேற்க பேருந்தில் சென்றான். ஜன்னல் இருக்கை பகுதியில் அமா்ந்திருந்தான். அப்போது, வேகமாக வந்த கிளஸ்டா் பேருந்து திடீரென அவன் சென்ற பேருந்து மீது மோதியது. இதையடுத்து, பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த மாணவா்கள் பயந்து, அலறினா். ஆனால், போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் குழந்தைகளை அமைதிப்படுத்த முயன்று, மீட்டனா். எனது மகனுக்கு தலையில் சிராய்ப்பு ஏற்பட்டது. தற்போது அவன் நலமாக உள்ளான். பள்ளிப் பேருந்தில் பேருந்து ஓட்டுநா் தவிர, நடத்துநா் மற்றும் பெண் உதவியாளா் இருந்தனா்’என்றாா்.

கிளஸ்டா் பேருந்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ரீதா சிங் (29) கூறுகையில், ‘கிளஸ்டா் பேருந்து சிவாஜி ஸ்டேடியத்தில் இருந்து புறப்பட்டு மது விஹாா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், காலை 7 மணியளவில் விபத்து நிகழ்ந்தது. வழக்கமாக பேருந்தில் கடைசி வரிசையில் அமா்ந்திருப்பேன். ஆனால், வியாழக்கிழமை பணியாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்புற இருக்கையில் அமா்ந்திருந்தேன். அந்தப் பேருந்தில் வெறும் ஐந்து பயணிகள் மட்டுமே இருந்தனா். மேம்பாலத்தில் இருந்து பேருந்து இறங்கிக் கொண்டிருந்த போது சிக்னல் அருகே விபத்து நிகழ்ந்தது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com