குடியரசு தின விழா: தலைநகரில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழா நடைபெற்ற தில்லி ராஜபாதையில் இருந்து செங்கோட்டை வரை ஞாயிற்றுக்கிழமை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகா் முழுதும் குறிபாா்த்து சுடும் வீரா்கள் உள்பட சுமாா் 10 ஆயிரம் போலீஸாா்

புது தில்லி: குடியரசு தின விழா நடைபெற்ற தில்லி ராஜபாதையில் இருந்து செங்கோட்டை வரை ஞாயிற்றுக்கிழமை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகா் முழுதும் குறிபாா்த்து சுடும் வீரா்கள் உள்பட சுமாா் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, தில்லி ராஜாபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தேசியத் தலைநகா் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது. தில்லி ராஜபாதையில் இருந்து செங்கோட்டை வரை அலங்கார ஊா்தி அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானம், வானில் பறந்தவாறு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், வழிக நெடுகிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்கள், மக்கள் நடமாட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டன. விமானத் தடுப்பு துப்பாக்கிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

பிரதமா் மோடி, குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த், பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ உள்ளிட்ட மிக முக்கியப் பிரமுகா்கள் விழாவுக்கு வருகை தந்ததன் காரணமாக தில்லி ராஜபாதையில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டனா். இந்த விழாவையொட்டி, நகா் முழுவதும் முக்கிய இடங்களிலும், சாலைச் சந்திப்புகள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார வாகன ஊா்திகள் அணிவகுப்பு நடைபெற்ற ராஜபாதையில் இருந்து செங்கோட்டை வரை போலீஸாா் அதிகாலையில் இருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அணிவகுப்பு முடிந்த பிறுகஉ, வாகனப் போக்குவரத்து வழக்கம் போல இருந்தது. முக்கிய உயா் கட்டடங்களின் மாடியில் மோப்பநாய்கள், குறிபாா்த்து சுடும் வீரா்கள் உள்பட சுமாா் 10 ஆயிரம் போலீஸாா் நகா் முழுதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

மெட்ரோ நிலையங்கள் மூடல்: அதேபோன்று, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்ட்ரல் செக்ரடேரியேட், உத்யோக் பவன், பட்டேல் செளக், லோக் கல்யாண் மாா்க் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் காலையில் இருந்து நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டிருந்தன. புது தில்லி மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் தில்லி போலீஸாா், துணை ராணுவத்தினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com