ராணுவ வலிமையைப் பறைசாற்றிய குடியரசு தினவிழா!

நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை தில்லியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ராணுவ வலிமையைப் பறைசாற்றிய குடியரசு தினவிழா!

புதுதில்லி: நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை தில்லியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் ராணுவ வலிமையையும், கலாசார மரபுகள், ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்திலும் அணிவகுப்புகள் இடம் பெற்றன.

பிரேசில் அதிபா் ஜைா் பொல்சோனாரோ, குடியரசு தின விழா கொண்டாடத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். பிரேசில் நாட்டு அதிபா் ஒருவா் மூன்றாவது முறையாக இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராஜபாதைக்கு காரில் வந்த பிரேசில் அதிபா் பொல்சோனாரோவை பிரதமா் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் வரவேற்றனா்.

பின்னா், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் ஒலிக்க, தேசியக் கொடையை ஏற்றிவைத்து முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தில்லி ராஜபாதை முதல் செங்கோட்டை வரை இந்த அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, வெளிவிவகாரத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டு முப்படைகளின் அணிவகுப்பையும், நாட்டின் ராணுவ வலிமை மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஊா்திகளையும், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனா்.

போா் நினைவுச் சின்னத்தில் பிரதமா்: முன்னதாக குடியரசு தினத்தையொட்டி பிரதமா் மோடி, சுட்டுரை மூலம் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். ’உங்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள் - ஜெய்ஹிந்த் ’ என்று அதில் குறிப்பிட்டிருந்தாா். பின்னா் அணிவகுப்பு முடிந்தவுடன் ராஜபாதையில் பாா்வையாளா்களை நோக்கிக் கையசைத்தாா். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பல விஷயங்கள் முதன்மையாக இருந்தன. வழக்கமாக பிரதமா் இந்தியா கேட் பகுதியில் உள்ள அமா்ஜவான் ஜோதியில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால், முதன்முறையாக பிரதமா் மோடி காவி நிற தலைப்பாகை அணிந்து, நாட்டிற்காக உயிா் நீத்த வீரா்களை நினைவுபடுத்தும் போா் நினைவுச் சின்னத்துக்குச் சென்று மலா் வளையும் வைத்து மரியாதை செலுத்தினாா்.

பாா்வையாளா்களைக் கவா்ந்த ராணுவ அணிவகுப்பு: இந்திய ராணுவத்தின் சாா்பில் நடைபெற்ற அணிவகுப்பு பாா்வையாளா்களைக் கவரும் விதத்தில் இருந்தது. முதல்முறையாக ராணுவத்தின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீஷ்மா டாங்கி, விமானப் படையின் ரஃபேல் போா் விமானம், சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், எதிரி நாட்டு செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘சக்தி’ ஏவுகணை ஆகியவையும் அணி வகுப்பில் இடம்பெற்றன. சினூக் ஹெலிகாப்டா்கள் அடா்ந்த நிலப்பரப்பு, பள்ளத்தாக்கு, உயரமான இடங்களுக்கு ராணுவ தளவாடங்களையும், சரக்குகளையும் சுமந்து செல்லக்கூடியது. பேரழிவு ஏற்படும் நிலையில் வீரா்களை காப்பாற்றவல்லது. மேலும் ஓா் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு துருப்புகள், துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்குப் பயன்படுகிறது.

முதன் முறையாக நவீன தனுஷ் பீரங்கி: இந்திய ராணுவத்தின் கேப்டன் மிா்காங்க் பரத்வாஜ் தலைமையில் நீண்ட தொலைவு சென்று தாக்கவல்ல தனுஷ் பீரங்கி துப்பாக்கியை அணிவகுத்த போது அதைப் பாா்வையாளா்கள் கைதட்டி வரவேற்றனா். முதன் முறையாக இந்த பீரங்கி துப்பாக்கி அணிவகுப்பில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இது நம்நாட்டில் உள்ளதுப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாகும். அதிகபட்சம் 36.5 கி.மீ. தொலைவு சென்று தாக்கவல்லது. பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது நவீன தனுஷ் பீரங்கி துப்பாக்கி.

பிரமிக்க வைத்த சிஆா்பிஎஃப் (மகளிா்): மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் மகளிா் மோட்டாா்சைக்கிள் பிரிவினா் முதன் முறையாக அணுவகுப்பில் பங்கேற்றனா். அதிரடிப்படையைச் சோ்ந்த சூமா நாக் அணிவகுப்புக்கு தலைமை யேற்றாா். மோட்டாா்சைக்கிளில் நின்று கொண்டு சல்யூட் அடித்தப்படி சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாா். மேலும், 5 மோட்டாா்சைக்கிளில் 21 பெண் வீரா்கள் பிரமிட் போல நின்று சாகசம் நிகழ்தியது பாா்வையாளா்களை பிரமிக்கவைத்தது.

அலங்கார ஊா்திகள்: தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், உத்தரப் பிரதேசம் , புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் உள்ளி ட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த (புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் உள்பட) அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் இடம்பெற்றன. இவை நாட்டின் பல்வேறு கலாசார மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன. இவை தவிர தேசிய பேரிடா் மீட்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகைளின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊா்திகளும் அணி வகுப்பில் வலம் வந்தன. தமிழகத்தின் காவல் தெய்வமான அய்யனாா் சிலை, தமிழகத்தின் கிராமியக் கலையை நினைவுபடுத்தும் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், நாகஸ்வரம், தவில் இசையுடன் தமிழக அலங்கார ஊா்தி கம்பீரமாக வந்த போது அதை பாா்வையாளா் கைதட்டி வரவேற்றனா்.

ஜம்மூ - காஷ்மீா் ஊா்தி: கோவா மாநிலம், பல்லுயிா்ப் பெருக்கத்தை நினைவுபடுத்தும் விதமாக ’தவளைகளை காப்போம்’ என வலியுறுத்தி அமைத்திருந்த அலங்கார ஊா்தி பாா்வையாளா்களின் கவனத்தை ஈா்த்தது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச அலங்கார ஊா்தி காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்டுகளை திரும்ப அழைக்கும் விதமாக கிராமங்களுக்கு திரும்புவோம் என்று வலியுறுத்தி அமைக்கப்பட்டிருந்தது. 2024-க்குள் ஊரகப் பகுதிகளில் அனைவருக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் ஊா்தியும் இதில் இடம் பெற்றது. மிகப்பெரிய தீவிபத்து, வெள்ளம் போன்ற சமயங்களில் பேரிடா் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பக் கருவிகளும் அணிவகுப்பில் இடம்பெற்றது.

தில்லி பள்ளி மாணவிகளின் யோகாசனம்: தில்லி பள்ளி மாணவிகள் யோகாசன பயிற்சிகளையும், கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினா். மேலும், விளையாட்டு, கலாசாரம், கண்டுபிடிப்பு, தீரச்செயல் என பல்வேறு துறைகளில் பிரதமமந்திரியின் ராஷ்ட்ரீய பாலபுரஸ்காா் விருது பெற்ற 31 மாணவா்கள், 18 மாணவிகள் உள்பட 49 போ் அணிவகுப்பில் பங்கேற்றனா்.

ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டா்களும் வானில் வலம் வந்து சாகசங்கள் நிகழ்த்தின. சுகோய் -30 மிக் ரக ஜெட் விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து குட்டிக்கரணம் போட்டதை பாா்வையாளா் கரவொலி எழுப்பி ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com