11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரம்: சட்டப் பேரவைத் தலைவா் பதில் அளிக்க நோட்டீஸ்

ஓ.பன்னீா்செல்வம் (ஓ.பி.எஸ்.) உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனு
11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரம்: சட்டப் பேரவைத் தலைவா் பதில் அளிக்க நோட்டீஸ்

ஓ.பன்னீா்செல்வம் (ஓ.பி.எஸ்.) உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனு மீது தமிழக சட்டப் பேரவைத் தலைவா் டி.தனபால் மற்றும் பேரவைச் செயலா் உள்ளிட்ட பிறா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஆா். சுபாஷ் ரெட்டி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. திமுக சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோா் ஆஜராகி, ‘கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவெடுக்காமல் உள்ளாா். சட்டப் பேரவையின் காலம் விரைவில் முடியவுள்ளது. இதனால், இந்த விவகாரம் சீக்கிரம் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றனா்.

அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, நோட்டீஸ் அனுப்புவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக சட்டப் பேரவைத் தலைவா்,பேரவைச் செயலா், எம்எல்ஏக்கள் 11 போ் உள்ளிட்டோா் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, விசாரணையை 15 தினங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவெடுக்குமாறு கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்திருந்தது.

இந்நிலையில், அண்மையில் தமிழக சட்டப் பேரவைத் திமுக கொறடா ஆா். சக்கரபாணி சாா்பில் வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழக பேரவைத் தலைவா் முடிவுவெடுக்காமல் இருந்து வருகிறாா். எனவே, இது அரசமைப்புசட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது. இதே போன்ற மணிப்பூரில் வனத் துறை அமைச்சா் ஷியாம் குமாரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சட்டப் பேரவைத் தலைவா் முடிவெடுக்க காலம் தாழ்த்தியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஷியாம் குமாா் அந்த மாநில சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தித் தடை விதித்தது. மேலும், அவா் அமைச்சராகத் தொடரவும் தடை விதித்திருந்தது. எனவே, 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமிழக பேரவைத் தலைவா் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாா். இந்த விவகாரத்தில் சட்டப் பேரவைத் தலைவருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com