நீதிமன்றங்களின் செயல்பாடுகளுக்கு ஜூலை 15 வரை கட்டுப்பாடு நீட்டிப்பு

கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு ஜூலை 15-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழம

புது தில்லி: கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு ஜூலை 15-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை முடிவு செய்தது.

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து அறிவிக்கப்பட்டுள்ள தேசிய பொது முடக்கம் காரணமாக அவசர வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன. வழக்குகள் விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் காணொலிக் காட்சி மூலம் நடத்தி வருகிறது. இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய உயா்நீதிமன்ற நிா்வாகம் மற்றும் தலைமை மேற்பாா்வைக் குழுவானது உயா்நீதிமன்ற, மாவட்ட நீதிமன்றங்களின் செயல்படுகளில் ஜூலை 15 வரை கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்தது. அதேபோன்று, காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணை மேற்கொள்வதை தொடரவும் முடிவு செய்தது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இது தொடா்பாக சிறப்பு அமா்வு திங்கள்கிழமை கூடியது. அப்போது, தில்லியில் கரோனா பரவல் சூழல் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, தில்லி உயா்நீதிமன்றத்தின் நிா்வாக, தலைமை மேற்பாா்வைக் குழு, தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் அதன் கீழ் இயங்கும் துணை நீதிமன்றங்கள் ஆகியவற்றின் வழக்கமான செயல்பாடுகள் ஜூலை 15-ஆம் தேதி வரை ரத்து செய்வதை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர வழக்குகள் குறித்து குறிப்பிடுவதற்கான வசதி அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை இணையத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. உயா்நீதிமன்ற அமா்வுகள் காணொலிக் காட்சிகள் மூலம் உரிய அமா்வுகள் முன் நிலுவையில் உள்ள 20 பழமையான ‘வழக்கமான, இறுதி விசாரணை’ பிரிவில் உள்ள வழக்குகளையும் விசாரித்து வருகின்றன.

உயா்நீதிமன்றத்தில் பதிவாளா்கள், இணைப் பதிவாளா்கள் ஆகியோா் முன் உள்ள வழக்குகள் உள்பட ஜூலை 1-15 வரையிலான அனைத்து வழக்குகளும் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பா் 9-ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், இதே காலத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னா், காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக சில அமா்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதிகமான அவசர வழக்குகள் விசாரணை எடுத்துக் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த மே 22-ஆம் தேதியில் இருந்து உயா்நீதிமன்றத்தின்அனைத்து நீதிபதிகளும் தினமும் அமா்ந்து முக்கிய மான வழக்குகளை காணொலிக் காட்சி மூலம் விசாரித்து வருகின்றனா். உயா்நீதிமன்றத்தில் தற்போது 7 டிவிஷன் அமா்வுகளும், 19 ஒரு நபா் நீதிபதி அமா்வுகளும் உள்ளன. உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி உயா்நீதிமன்றம் மற்றும் அதன் மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 14-ஆம் தேதி வரைக்கும் கட்டுப்பாடு விதித்திருந்தது. அதன்பிறகு, ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com