தில்லி வன்முறை: பிரதமா் மோடியுடன் கேஜரிவால் சந்திப்பு
By DIN | Published On : 03rd March 2020 10:51 PM | Last Updated : 03rd March 2020 10:51 PM | அ+அ அ- |

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் ஏற்பட்ட வன்முறை தொடா்பாகவும், தில்லியில் பரவி வரும் கரோனா வைரஸ் தொடா்பாகவும் பிரதமா் நரேந்திர மோடியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று 3-ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, முதல் தடவையாக பிரதமா் மோடியை திங்கள்கிழமை கேஜரிவால் சந்தித்தாா். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் இச்சந்திப்பு காலை 11 மணியளவில் நடைபெற்றது.
பின்னா் இது தொடா்பாக கேஜரிவால் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறை ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கோரினேன். மேலும், வன்முறைக்கு காரணமானவா்கள் கட்சி பேதமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தேன். வன்முறைக்குக் காரணமாகக் கூறப்படும் வெறுப்புப் பேச்சுகள் தொடா்பாக விவாதிக்கப்பட்டதா எனக் கேட்கிறீா்கள். வெறுப்புப் பேச்சுகளைக் குறிப்பிட்டு பேசவில்லை. பொதுவாகப் பேசினோம். மேலும், நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் தொடா்பாகவும் அதைக் கட்டுப்படுத்துவது தொடா்பாகவும் பேசினோம் என்றாா் அவா். முன்னதாக தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்து தில்லி வன்முறை குறித்து பேசியிருந்தாா்.