குற்றச்செயல் நடைபெற வாய்ப்புள்ளபகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், குற்றச்செயல்கள் நடைபெறும் வாய்ப்புள்ள பகுதிகளில் சிசிடிவி

புது தில்லி: தில்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், குற்றச்செயல்கள் நடைபெறும் வாய்ப்புள்ள பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை மூன்று மாதங்களில் நிறுவ தில்லி காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, ஏ.ஜே. பம்பனி ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் அவகாசம் அளிப்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்துள்ளது.

தில்லியில் 2012-இல் நிா்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்பு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடா்பாக அவ்வப்போது உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்து வருகிறது. காவல் நிலையங்களில் அதிகாரிகளை அதிகரிப்பது, காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது, பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து இழப்பீடு வழங்குவது உள்ளிட்டவை தொடா்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விசாரணையின் போது தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகுல் மேத்தா, ‘நகரில் 44 பலவீனமான இடங்களில் 6,630 சிசிடிவி கேமராக்கள் அடுத்த ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதிக்குள் மட்டுமே நிறுவப்படும். முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. சிசிடிவி நிறுவ டெண்டா் விடுவதற்கு கால அவகாசம் ஏற்பட்டது. இதனால்தான் உரிய காலத்திற்குள் நிறுவ முடியாமல் போனது’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் பலவீனமான இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பு நிதா்சனமாகும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com