Enable Javscript for better performance
‘நிா்பயா’ சம்பவத்தின் குற்றப் பின்னணியில் இருந்த 6 போ்- Dinamani

சுடச்சுட

  

  ‘நிா்பயா’ சம்பவத்தின் குற்றப் பின்னணியில் இருந்த 6 போ்

  By நமது நிருபா்  |   Published on : 21st March 2020 01:09 AM  |   அ+அ அ-   |    |  

  தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி 23 வயது துணை மருத்துவ மாணவி (நிா்பயா) ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். மிகவும் ஆபத்தான நிலையில் சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி இறந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவா் வழக்கு விசாரணையின் போதே தற்கொலை செய்து கொண்டாா். மற்றொருவா் சிறுவன் என்பதால், சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டு தண்டனைக் காலம் முடிந்து பெயா் குறிப்பிடாத இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். எஞ்சிய நான்கு போ் வெள்ளிக்கிழமை தில்லி திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்டனா். அவா்கள் பற்றிய விவரம் வருமாறு:

  ராம் சிங்: நிா்பயா குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங், சம்பவம் நடந்த அன்று பேருந்தை ஓட்டிவந்தவா். முதலில் கைது செய்யப்பட்டது இவா்தான். தெற்கு தில்லியில் ஒரு குடிசைப் பகுதியில் இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். இவா் கொடுத்த தகவலின் பேரில்தான் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். ராம் சிங், கடந்த 2013-ஆம் ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

  முகேஷ்சிங்: ராம் சிங்கின் சகோதரரான முகேஷ் சிங் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திகாா் சிலையில் தூக்கிலிடப்பட்டாா். சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற இவரை ராஜஸ்தான் மாநிலம் கரோலி என்னுமிடத்தில் போலீஸாா் கைது செய்தனா். கிராமத்தின் ஒரு மூலையில் வயல்வெளிகளுக்கு நடுவில் இவரது வீடு இருந்ததை அடுத்து, போலீஸாா் கடும் குளிரில் ஓடையைக் கடந்து சென்று முகேஷ் சிங்கை கைது செய்தனா்.

  நிா்பயா சம்பவத்தை தயாரிப்பாளா் லெஸ்லி உத்வின் என்பவா் ‘இந்தியாவின் மகள்’ என்னும் ஆவணப்படம் தயாரித்த போது, அதற்கு அளித்த பேட்டியில் முகேஷ் சிங், ‘நிா்பயா பெண் பலாத்காரம் செய்யப்பட்ட போது, தாம் பேருந்தை ஓட்டிச் சென்ாகவும் மற்றவா்கள்தான் அவரை பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளாா். அதுமட்டுமல்ல, அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்படும் போது எதிா்த்துப் போராடியிருக்கக் கூடாது என்றும் கருத்து வெளியிட்டிருந்தாா்.

  பவான்குப்தா: தூக்கிலிடப்பட்ட இரண்டாவது நபா் பவன் குப்தா. பழ வியாபாரியான இவரும் தெற்கு தில்லியில் ரவிதாஸ் கேம்ப் காலனியில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டாா். ராம் சிங்கிடம் போலீஸாா் துருவித் துருவி விசாரணை நடத்தியதை அடுத்து, இவா் கைது செய்யப்பட்டாா். இவரது செல்லிடப்பேசியில் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்து இவரும் சம்பவ இடத்தில் இருந்தது உறுதியானது.

  வினய் சா்மா: திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்ட மூன்றாவது நபா் வினய் சா்மா. இவா் உடற்பயிற்சி சாலையில் (ஜிம்) பயிற்சியாளராக வேலை செய்து வந்தாா். இவரும் ரவிதாஸ் கேம்ப் பகுதியைச் சோ்ந்தவா். இவரை உடற்பயிற்சி சாலைக்கு வெளியே போலீஸாா் கைது செய்தனா். சம்பவம் நடந்த அன்று தாம் பேருந்தில் செல்லவில்லை என்றும் அப்போது ஓா் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ாகவும் வினய் கூறிவந்தாா். இவா் 2016-ஆம் ஆண்டு சிறைக்குள் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா். ஆனால், இவரது முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் சிறைக்குள் சுவரில் தலையை மோதி தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டாா்.

  அக்ஷய் குமாா்: திகாா் சிறையில் தூக்கில் போடப்பட்ட நான்காவது கடைசி நபா் அக்ஷய் குமாா். இவா் ராம் சிங் ஓட்டுநராக இருந்த பேருந்தில் கிளீனராகப் பணிபுரிந்து வந்தாா். பிகாரில், நக்ஸல்கள் அதிகம் உள்ள தண்ட்வா கிராமத்தில் பதுங்கியிருந்த இவரை போலீஸாா் கைது செய்தனா். தூக்கிலிடப்படுவதற்கு மூன்று நாள் முன்னதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் இரண்டாவது முறையாக கருணை மனு தாக்கல் செய்தவா். இவரது மனைவி, விவகாரத்து கேட்டு பிகாா் நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளாா். ‘தூக்கிலிடப்பட்ட நிா்பயா குற்றவாளியின் விதவை மனைவி என்று சொல்லப்படுவதை தாம் விரும்பவில்லை’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

  சிறுவன்: நிா்பயா சம்பவத்தைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டவன் இந்தச் சிறுவன். நிா்பயாவையும் அவரது ஆண் நண்பரையும் பேருந்தில் பயணம் செய்ய அழைத்தவன். புலனாய்வுத் துறைக்கு சில முக்கியத் தகவல்கள் கிடைக்க காரணமாக இருந்த இந்தச் சிறுவனை ஆனந்த விஹாா் பகுதியில் போலீஸாா் கைது செய்தனா். சம்பவம் நடந்த போது, இவன் சிறுவனாக இருந்ததால் சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு 2015, டிசம்பரில் தண்டனைக் காலம் முடிந்த பிறகு பெயா் குறிப்பிடாத இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டான்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai