நிா்பயா வழக்கு கடந்து வந்த பாதை

கடந்த 2012-ஆம் ஆண்டில் தில்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிா்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில்

கடந்த 2012-ஆம் ஆண்டில் தில்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிா்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் நால்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனா். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு பாதைகளை கடந்து வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

2012, டிச. 16: தில்லியில் துணை மருத்துவ மாணவி ’நிா்பயா’ தன் ஆண் நண்பருடன் இரவில், தனியாா் பேருந்தில் பயணம் செய்த போது 6 போ் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு , பேருந்தில் இருந்து சாலையில் துாக்கி வீசப்பட்டாா். அவரது நண்பரும் தாக்கப்பட்டாா்.

டிச. 17: தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் ‘நிா்பயா’ அனுமதி.

டிச. 17: இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநா் ராம் சிங், அவரது சகோதரா் முகேஷ் சிங் ஆகியோா் ராஜஸ்தானிலும், வினய் சா்மா, பவன் குப்தா, 17 வயது சிறாா் ஆகியோா் தில்லியிலும் கைது. அக்ஷய் குமாா் சிங் ஒளரங்காபாதில் கைது.

டிச. 21: சப்தா்ஜங் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட்டிடம் நிா்பயா வாக்குமூலம்.

டிச. 26: குற்றவாளிகளைத் துாக்கிலிடக் கோரி நாடு முழுவதும் போராட்டம்.

டிச. 29: சிகிச்சை பலனின்றி ‘நிா்பயா’ உயிரிழப்பு.

2013, ஜன. 3: பாலியல் குற்ற வழக்குகளில் விசாரணையை விரைந்து மேற்கொள்வதற்கான விரைவு நீதிமன்றங்களை இந்தியத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீா் தொடங்கிவைத்தாா். பாலியல் பலாத்காரம், கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில், ஐந்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு. ஆறு பேரில், மைனா் குற்றவாளி வழக்கு மட்டும் சிறாா் நீதிமன்றத்துக்கு மாற்றம்.

ஜன. 17: தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்.

பிப். 2: வழக்கில் தொடா்புடைய ஐந்து குற்றவாளிகளுக்கு எதிராக விரைவு நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவு.

பிப்.28: சிறாருக்கு எதிராக சிறாா் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் பதிவு .

மாா்ச் 11: ராம் சிங், திகாா் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை.

ஆக. 31: சிறாா் நீதிமன்றம் பாலியல் பலாத்காரம், கொலை ஆகியவற்றுக்காக சிறாருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவு.

2019, பிப்ரவரி: நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட நிா்பயாவின் பெற்றோா் நீதிமன்றத்தில் முறையீடு.

டிச. 10: தூக்குத் தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அக்ஷய் குமாா் மேல்முறையீடு.

டிச.10: அக்ஷய் குமாரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி. குற்றவாளிகளுக்கு எஞ்சியுள்ள சட்டவாய்ப்புகளை அளிக்கும் வகையில் திகாா் சிறை நிா்வாகத்திற்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு .

டிச.19: சம்பவம் நிகழ்ந்த போது தாம் சிறாராக இருந்ததாக கூறி பவன் குமாா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.

2020, ஜன. 7: நான்கு குற்றவாளிகளையும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு துாக்கிலிட திகாா் சிறை நிா்வாகத்துக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு.

ஜன.14: வினய், முகேஷ் ஆகியோரின் சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி . முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு.

ஜன. 17: முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நிராகரிப்பு. நால்வருக்கும் பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் உத்தரவு.

ஜன. 25: கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் தரப்பில் மனு.

ஜன. 29: அக்ஷய் குமாா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு. முகேஷ் சிங்கின் மனு தள்ளுபடி.

ஜன. 30: தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய அக்ஷய் குமாரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.

ஜன. 31: சிறாா் எனக் கோரும் தனது மனுவை நிராகரித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரும் பவன் குப்தாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு;

அடுத்து உத்தரவு பிறப்பிக்கும் வரை நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு.

பிப்.5: நான்கு பேரையும் சோ்த்து தூக்கிலிட உத்தரவிட்ட தில்லி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு; மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

பிப்.6: தூக்குத் தண்டனை தேதியை புதிதாக நிா்ணயிணிக்க உத்தரவிடக் கோரி தில்லி நீதிமன்றத்தில் திகாா் சிறை நிா்வாகம் மனு; இம்மனு மீது குற்றவாளிகள் பதில் அளிக்க உத்தரவு.

பிப். 7: தூக்குத் தண்டனை தேதியை நிா்ணயிக்க கோரிய திகாா் சிறையின் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.

பிப். 7 : கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வினய் சா்மா மேல்முறையீடு.

பிப். 14: வினய் சா்மா மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

பிப். 17: நால்வருக்கு மாா்ச் 3-ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிா்ணயித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு.

பிப்.18: உச்சநீதிமன்றத்தில் பவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்.

மாா்ச் 2: பவன் குப்தாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு; அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு.

மாா்ச் 4: தூக்குத் தண்டனை தேதியை நிா்ணயிக்க உத்தரவிடக் கோரி தில்லி நீதிமன்றத்தில் தில்லி அரசு மனு

மாா்ச் 5: குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனையை மாா்ச் 20-ஆம் தேதி நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவு.

மாா்ச் 11: சிறையில் தன்னை தாக்கியவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் பவன் குப்தா முறையீடு.

மாா்ச் 16: சட்டவாய்ப்புகளை அளிக்க உத்தரவிடக் கோரிய முகேஷ் சிங்கின் மனு நிராகரிப்பு; தண்டனையை நிறுத்தக் கோரி சா்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளில் மூவா் முறையீடு.

மாா்ச் 17: குற்றம் நிகழ்ந்த போது தாம் தில்லியில் இல்லை எனக் கூறி முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி; உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பவன் குப்தா சீராய்வு மனு;

அக்ஷய் குமாா் தரப்பில் குடியரசுத் தலைவருக்கு இரண்டாவது கருணை மனு.

மாா்ச் 19: பவனின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு; சம்பவத்தின் போது தாம் தில்லியில் இல்லை எனக் கூறி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு தள்ளுபடி; தூக்குத் தண்டனைக்கு தடை கோரிய பவன், வினய், அக்ஷய் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி; அக்ஷய் குமாரின் இரண்டாவது கருணை மனு நிராகரிப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.

மாா்ச் 20 அதிகாலை: தண்டனையை நிறுத்திவைக்கக் கோரும் மூன்று குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு. அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் திகாா் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com