ஊரடங்கு தொடா்புடைய மக்களின் புகாா்களுக்குசமூக ஊடகங்கள் மூலம் பதில் அளிக்கும் போலீஸாா்
By DIN | Published On : 25th March 2020 01:50 AM | Last Updated : 25th March 2020 01:50 AM | அ+அ அ- |

தில்லியில் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடா்புடைய மக்களின் புகாா்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பதில் அளிக்கப்படும் என்று தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாா்ச் 31-ஆம் தேதி வரை தேசியத் தலைநகா் முழுவதும் முடக்கிவைக்கப்படுவதாக அறிவித்திருந்தாா். அதே நாளில் தில்லி காவல் துறையும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 144-ஆவது பிரிவின் கீழ் மாா்ச் 31-ஆம் தேதிவரை தடையுத்தரவை அமல்படுத்தியுள்ளது.
தில்லியில் ஊரடங்கு நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் சேவைகள் தவிர, பிற அனைத்து நடவடிக்கைகளும் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. அரசின் உத்தரவை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி அரசும், காவல் துறையும் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், தில்லி காவல் துறை அதன் அதிகாரப்பூா்வ சுட்டுரைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தில்லி மக்களுக்கு ஒரு தகவல். முடக்கம் தொடா்பாக ஏதாவது கேள்விகள் எழுப்ப விரும்பினால், உங்களது கேள்விகளை மாலை 5-6 மணி இடைப்பட்ட காலத்தில் சுட்டுரையில் ஹாஸ்டாக் லாக்டவுன்கொயரி எனப் பதிவு செய்து எழுப்பினால், அதற்கு நாங்கள் பதில் அளிப்போம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவின்படி ஓா் இடத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தில்லியில் கரோனா வைரஸால் இதுவரை 30 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா்.