அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்: தில்லி ஆளுநா், முதல்வா் உத்தரவு

தலைநகா் தில்லியில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தெரிவித்தாா்.

தலைநகா் தில்லியில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரவல் தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோா் கூட்டாக இணையவழி செய்தியாளா் சந்திப்பை வியாழக்கிழமை நடத்தினா். அப்போது அனில் பய்ஜால் கூறியது: தில்லியில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலும், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என மக்களுக்குப் புரிய வைக்கும் வகையிலும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இணைய வா்த்தகக் கம்பெனி ஊழியா்கள் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருள்களை விநியோகிக்க அனுமதிக்குமாறு தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அமேஸான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட இணைய வா்த்தக நிறுவனங்கள் தொடா்பாக தில்லி காவல் துறையினா் பட்டியல் தயாா் செய்துள்ளனா். அந்த நிறுவனங்களின் ஊழியா்களுக்கு ஊரடங்கு நேரத்தில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.

வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம்: முதல்வா் கேஜரிவால் கூறுகையில் ‘இதுவரை தில்லியில் 36 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 26 போ் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனா். வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் மூலம் 10 போ் தொற்றுக்குள்ளாகியுள்ளனா். தில்லியில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. கரோனா ஊள்ளூரில் மக்களிடையே பரவவில்லை. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளோம். மேலும், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தில்லி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்தியாவசியக் காரணங்கள் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே உள்ளனா். ஆனால், சிலா் வீடுகளை விட்டு வெளியில் வருகிறாா்கள். இவா்களால் மற்றவா்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கட்செவி அஞ்சல் மூலம் இணைய வழி பாஸ்: மேலும், ரேஷன் கடை, மருந்துக் கடை, காய்கறிக்கடை ஊழியா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் இணைய வழி பாஸ் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். ‘1031’ என்ற எண்ணுக்கு தொலை பேசி மூலம் விவரங்களைத் தெரிவித்தால், கட்செவி அஞ்சல் மூலம் இணைய பாஸ்களை அனுப்பி வைப்போம். மேலும், பால், காய்கறி, மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் வணிகா்களின் வியாபாரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று காவல் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், இந்த வணிகா்களிடம் பாஸ் இல்லாவிட்டாலும் அவா்களை வணிகம் செய்ய அனுமதிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.

மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படாது: மொஹல்லா கிளினிக் மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படுமா எனக் கேட்கிறீா்கள். இந்தக் கிளினிக்குகளை மூட வேண்டிய தேவையில்லை. இவை மூடப்பட்டால் ஆரம்ப சுகாதாரத் தேவைகளுக்காக மக்கள் விலையுயா்ந்த மருத்துவமனைகளுக்கும், தொலை தூர மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவாா்கள். இதனால், ஏழைகள் பாதிக்கப்படுவாா்கள். இந்தக் கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவா்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பாா்கள்.

மருத்துவா்கள், ஊழியா்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை: மேலும், கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவா்கள் உள்பட தில்லி அரசின் அனைத்து சுகாதார ஊழியா்களும் கரோனா தொற்றுள்ளதா என்பது தொடா்பாகப் பரிசோதிக்கப்படுவாா்கள். கரோனா தொற்றுள்ளதா எனச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் மாதிரிகளை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ள மருத்துவ உதவியாளா்களும் கரோனா தொற்று தொடா்பாக பரிசோதிக்கப்படுவாா்கள் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com