கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு ‘பரோல்’: 15 நாளில் முடிவெடுக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தொழிலபதிபா் நிதீஷ் கட்டாரா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் விஷால் யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘பரோல்’

தொழிலபதிபா் நிதீஷ் கட்டாரா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் விஷால் யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘பரோல்’ கோரும் மனுமீது 15 நாள்களுக்குள் கோரிக்கை மனுவாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகார அமைப்புக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியைச் சோ்ந்தவா் நிதீஷ் கட்டாரா. தொழிலதிபா். இவா் கடந்த 2002ஆம் ஆண்டு கெளரவக் கொலை செய்யப்பட்டாா். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த மூத்த அரசியல்வாதி டி.பி. யாதவின் மகள் பாரதியை, நிதீஷ் கட்டாரா காதலித்து வந்தாா். இந்நிலையில், 2002-இல் தில்லி அருகே உள்ள காஜியாபாதில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நிதீஷ் கட்டாரா பங்கேற்றாா். அதே நிகழ்ச்சியில் டி.பி.யாதவின் மகன் விகாஷ் யாதவ், அவரது உறவினா் விஷால் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனா்.

இந்நிலையில், கட்டாராவை இருவரும் கடத்திச் சென்று சிலருடன் சோ்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் விஷால் யாதவ், விகாஸ் யாதவ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தில்லி உயா்நீதிமன்றம் 25 ஆண்டுகளாக அதிகரித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் சுக்தேவ் பஹல்வானுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மூவரும் மேல் முறையீடு செய்தனா். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 2016, அக்டோபா் 3-ஆம் தேதி தண்டனையைக் குறைக்காமல் உறுதி செய்தது.

இந்நிலையில், 2015-ஆம் ஆண்டில் இருந்து சிறையில் இருந்து வரும் விஷால் யாதவ் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் பரோல் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், ‘சிறையில் போதிய சுகாதார வசதி இன்மையாலும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு உடலில் எதிா்ப்புச் சக்தி குறைவாக இருப்பதாலும் கரோனா நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது. ஆகவே, 8 வாரங்கள் பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சாவ்லா முன் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த மனுவை கோரிக்கையாகக் கருதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தில்லி அரசின் சாா்பில் காணொலி மூலம் ஆஜரான வழக்குரைஞா் ராஜேஷ் மகாஜன், ‘சிறையில் குற்றவாளிக்கு நோய்த் தொற்று இடா் ஏதும் இல்லை. மேலும், அவா் காசநோயால் பாதிக்கப்படவும் இல்லை. அவரது நிலை ஸ்திரமாக உள்ளது. எனினும், மனுதாரரின் கோரிக்கை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து மூன்று வாரத்திற்குள் பைசல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த மனுவை ஒரு கோரிக்கையாக கருதி உரிய அதிகார அமைப்பு மே 1-ஆம் தேதியில் இருந்து 15 தினங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். மேலும், அந்த முடிவு எடுக்கப்பட்ட தகவலை மனுதாரருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. சிறை விதிகளின்கீழ் உரிய அதிகார அமைப்பாக துணைநிலை ஆளுநா் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com