சவூதியில் இருந்து கர்ப்பிணிப் பெண்களை தாயகம் அழைத்து வருவதில் முன்னுரிமை: மத்திய அரசு உறுதி

கரோனா நோய்த் தொற்றுப் பரவலால், பொது முடக்கம் காரணமாக சவூதி அரேபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப்


புது தில்லி: கரோனா நோய்த் தொற்றுப் பரவலால், பொது முடக்கம் காரணமாக சவூதி அரேபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களை தாயகம் அழைத்து வருவதில் வழக்கமான செயல்பாட்டு நடைமுறையின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

நீதிபதி விபு பக்ரூவின் முன்னிலையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் ஆச்சார்யா மற்றும் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் நிலைக்குழுவின் பிரதிநிதி ஜஸ்மீத் சிங் இதற்கான உறுதிமொழியை அளித்தனர்.

முன்னதாக, கரோனா தொற்று தொடர்பான பொது முடக்கத்தால் சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 56 கர்ப்பிணிச் செவிலியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் "ஐக்கிய செவிலியர்கள் சங்கம்' என்ற அமைப்பின் சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மே 18-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதை அடுத்து திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஐக்கிய செவிலியர் சங்கத்தின் சார்பில் வழக்குரைஞர் சுபாஷ் சந்திரன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக சவூதி அரேபியாவில் இந்தியாவைச் சேர்ந்த 56 கர்ப்பிணி செவிலியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் பலரும் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர "வந்தே பாரத் மிஷன்' என்ற திட்டத்தை அண்மையில் மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இதன் இரண்டாவது கட்டமாக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கை மே 19 மற்றும் 24- ஆம் தேதி இடையே மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறு அழைத்துவரப்படுவோர்களில் அவசர மருத்துவச் சேவை தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழக்கமான செயல்பாட்டு நடைமுறையில் (எஸ்ஓபி) தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆகையால், அந்த நடைமுறையின்படி சவூதி அரேபியாவில் சிக்கித் தவித்து வரும் கர்ப்பிணி செவிலியர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் இவர்களை தாயகம் அழைத்து வர உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த செவிலியர்களுக்கு மருத்துவ மற்றும் மனநல, சமூக ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் அவர்களை உடனடியாக அழைத்து வரும் தேவை உள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com