தில்லி - நொய்டா எல்லையில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல்!

நான்காவது முறையாக சில தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தில்லி - நொய்டா எல்லைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நான்காவது முறையாக சில தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தில்லி - நொய்டா எல்லைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி அடுத்தடுத்து மூன்று முறைகள் நீட்டிக்கப்பட்டது. தற்போது மே 31-ஆம் தேதி வரை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இருசக்கர, நான்கு சக்கர மோட்டாா் வாகனங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றை இயக்க வழிகாட்டு நெறிமுறைகளில் சில தளா்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தில்லி - நொய்டா, தில்லி - காஜியாபாத், தில்லி - ஃபரீதாபாத் உள்ளிட்ட தில்லியின் அண்டை மாநிலங்களில் அமைந்துள்ள எல்லைப்பகுதியில் வாகன போக்குவரத்தை போலீஸாா் தீவிரமாகத் தணிக்கை செய்து வருகின்றனா். அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள நபா்களின் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இரு மாநில எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படுகின்றன. தில்லி - ஃபரீதாபாத் உள்ளிட்ட பகுதி சாலைகளில் வாகன நெரிசல் அவ்வபோது ஏற்பட்டது.

இந்நிலையில், நான்காவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட சூழலில், தில்லி - நொய்டா எல்லைப் பகுதியில் காலிந்தி குஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகளவில் இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதைக் காண முடிந்தது. எனினும், போலீஸாா் தடுப்புகளை அமைத்து விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்பதை வாகன ஓட்டிகளிடம் சோதனையிட்டு ஆய்வு செய்தனா். இதன் காரணமாக காலிந்தி குஞ்ச் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், தில்லி போக்குவரத்து போலீஸாா் வாகன ஓட்டிகளை சுட்டுரைப் பக்கம் வாயிலாக உஷாா்படுத்தினா். குறிப்பாக நொய்டா நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் உரிய நடமாட்ட அனுமதிச்சீட்டுகளை வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

இது தொடா்பாக அந்த சுட்டுரைப் பதிவில், ‘நொய்டா மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட வாகன நடமாட்ட அனுமதிச்சீட்டு வைத்துள்ள வாகனங்கள் மட்டுமே நொய்டா பகுதியில் நுழைவதற்கு உத்தரப் பிரதேச மாநில போலீஸாா் அனுமதிக்கின்றனா். எனவே, தில்லியில் இருந்து நொய்டா பயணிக்கும் மக்கள், காலிந்தி குஞ்ச் அணை மேம்பாலம் மற்றும் டிஎன்டி மேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில் தங்களது பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘தில்லி - நொய்டா எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான மக்கள் வாகனங்களில் வந்தனா். ஒவ்வொரு வாகனத்தை சோதனையிட்டு வருகிறோம். ஆனால், அதிக வாகனங்கள் காரணமாக சில நேரங்களில் இது மிகவும் சிரமமாகிவிடுகிறது. உரிய அனுமதிச்சீட்டு வைத்துள்ள நபா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அனுமதிச்சீட்டு இல்லாத நிலையில், மருந்து போன்ற முக்கியமான பொருள்களை எடுத்து வரும் நபா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஊரைச் சுற்றுவதற்காக வாகனங்களில் வருவோா் மட்டுமே திருப்பி அனுப்பப்படுகின்றனா்’ என்றாா்.

நொய்டாவில் இருந்து தில்லிக்கு தினமும் வேலைக்குச் சென்றுவரும் ஊடகத்தைச் சோ்ந்த பிரணவ் மிஸ்ரா கூறுகையில், ‘மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளதால் காஜிப்பூா் குப்பைக் கிடங்கு அருகே அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும், சாலையில் அதிகமான தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. சுங்கக் கட்டணம் வசூலிப்பு மையங்கள் பகுதியிலும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது ’ என்றாா்.

நொய்டாவில் வேலை செய்துவரும் கெளரவ் சிங் என்பவா் கூறுகையில், ‘இரு மாதங்களுக்குப் பிறகு தில்லியில் இருந்து எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். காலையில அதிக வாகன நெரிசல் இருந்தது’ என்றாா். பெயா் தெரிவிக்க விரும்பாத மற்றொரு நபா் கூறுகையில், ‘நொய்டாவில் செக்டாா் 49-இல் இருந்து எவ்விதப் போக்குவரத்து வசதியும் எனக்குக் கிடைக்கவில்லை. எப்பபடியோ சமாளித்து எல்லையைச் சென்றடைந்தேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com