தில்லியில் கட்டுப்பாடுகள் தளர்வு

தில்லியில் இரண்டு மாத காலமாக முடக்கப்பட்டிருந்த பேருந்து, வாடகைக் கார்கள், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட போக்குவரத்துகள்
தில்லியில் கட்டுப்பாடுகள் தளர்வு

புது தில்லி: தில்லியில் இரண்டு மாத காலமாக முடக்கப்பட்டிருந்த பேருந்து, வாடகைக் கார்கள், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட போக்குவரத்துகள் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தார். அதேநேரத்தில், மெட்ரோ, பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், சலூன்கள் மே 31ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  இது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை இணையவழி மூலம் அளித்துள்ள பேட்டியின் விவரம்: 

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த இரண்டு மாத காலமாக அமலில் இருந்த சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. அவற்றை தில்லி அரசு முழுமையாகப் பின்பற்றும். கரோனாவை எதிர்கொள்ள முழு அடைப்பு உத்தரவு நிரந்தரத் தீர்வு அல்ல. பொருளாதரத்தை திறக்க வேண்டிய நிலையில் உள்ளோம். 
சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதிக்கப்படும். ஏதாவது ஒரு கடை அத்தியாவசியமில்லாத பொருள்களை விற்பனை செய்தால், ஒற்றை-இரட்டை இலக்க அடிப்படையில் அவை திறந்திருக்க அனுமதிக்கப்படும். தனியார் மதுபானக் கடைகளும் செயல்பட அனுமதி உண்டு. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படும். 
பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி: தில்லியில் பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு பேருந்தில் 20 பேருக்கு மேல் செல்ல அனுமதி கிடையாது. மோட்டார் சைக்கிளை பின்னால் யாரும் அமராமல் இயக்கலாம். பேருந்துகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை மே 31 வரை நிறுத்தப்படுகிறது. அதன் பிறகு நிலைமையைப் பொறுத்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். 
உபேர், ஓலா போன்ற வாடகைக் கார்கள், ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதிக்கப்படுகிறது. எனினும், காரில் இரண்டு பேருக்கு மேல் செல்ல அனுமதி இல்லை. கார் பூலிங், கார் ஷேரிங்குக்கு அனுமதி கிடையாது. ஆட்டோக்கள், இ-ரிக்ஷாக்கள், சாதாரண ரிக்ஷாக்கள் இயங்கவும் அனுமதி உண்டு. ஆனால் இவற்றில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். தனியார் கார்களிலும் இரண்டு பேருக்கு மேல் அனுமதி இல்லை. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து செல்வதற்குத் தடை நீடிக்கும்.
கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி: கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். தில்லியில் வசிக்கும் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்படும். ஆனால், அங்கு உணவு அருந்த அனுமதி வழங்கப்பட மாட்டாது.

சினிமாவுக்குத் தடை: அத்தியாவசிய சேவையாளர்கள் தவிர மற்றவர்கள் மாலை 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை வீடுகளை விட்டு வெளியில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவசரத் தேவைகளுக்காக செல்பவர்கள் தகுந்த காரணங்களைக் கூறி செல்ல வேண்டும். 

ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள், பெரு வணிக வளாகங்கள், ஜிம், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியன திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது. முடி திருத்தும் கடைகள், ஸ்பாக்கள் ஆகியன தொடர்ந்தும் மூடப்படும். பெரிய அளவில் நடைபெறும் அரசியல், சமூக, பொழுது போக்கு, கல்வி, கலாசார, மத சார்பான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது. வழிபாட்டு இடங்கள் திறக்க அனுமதியில்லை. வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள், உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களும் தொடர்ந்தும் மூடப்படும் என்றார்.

கரோனாவுக்கு மத்தியில் வாழப் பழக வேண்டும்
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது நல்ல சமிக்ஞை ஆகும். தில்லியில் கரோனா பாதித்தவர்களில் 45 சதவீதம் பேர் குணமாகியுள்ளனர். கரோனா பாதிப்பு ஒரு சில மாதங்களில் இல்லாமல் போகாது. எனவே,மக்கள் கரோனாவுக்கு மத்தியில் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை என்றார் கேஜரிவால்.

மரணத்திற்கான வழி
பொது முடக்கத்தில் இருந்து முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ள பல்வேறு தளர்வுகளுக்கு தில்லி பாஜக மக்களவை உறுப்பினர் கெüதம் கம்பீர் கடுமையாக கண்டனத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், "ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ள தளர்வுகள் தில்லி குடிமக்களுக்கு மரணத்திற்கான வழியை ஏற்படுத்தும் முடிவுகளாகும். 

ஆகையால், ஒரிரு முறை யோசனை செய்து தில்லி அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய கோருகிறேன். ஒரு தவறான நடவடிக்கையில் எல்லாம் முடிந்துவிடும்' என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com