மாநகராட்சிகளுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்: தில்லி அரசுக்கு பாஜக கோரிக்கை

புது தில்லி: மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி, புது தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மீனாட்சி லேகி ஆகியோர் திங்கள்கிழமை கூட்டாக அளித்த பேட்டி: தில்லியில் கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். 
கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி வைத்துள்ள இடங்கள், மருத்துவமனைகள் உள்பட முக்கிய இடங்களை அவர்கள் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். ஆனால், இந்தத் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாநகராட்சிகளால் ஊதியம் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்காததே இதற்குக் காரணமாகும்.
இந்த விவகாரத்தில் தில்லி அரசு தரம்தாழ்ந்த அரசியல் செய்து வருகிறது. தில்லியில் கேஜரிவால் ஆட்சியமைப்பதற்கு முன்பு பட்ஜெட்டில் 20 சதவீதத்தை மாநகராட்சிகளுக்கு ஒதுக்குவேன் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது மாநகராட்சிகளுக்கு முறைப்படி சேர வேண்டிய நிதியைக் கூட அவர் வழங்கவில்லை. 
மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையிலும், தங்களது பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டால், தில்லியில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும். தில்லி அரசு தெற்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.184 கோடி, கிழக்கு தில்லி மாநகாரட்சிக்கு ரூ.245 கோடி, வடக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.541 கோடியும் வழங்க வேண்டும். இந்தத் தொகையை உடனடியாக தில்லி அரசு விடுவிக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com