வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம்: யுஏபிஏ சட்டத்தில் ஜாமியா மாணவா் கைது

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடா்பாக தில்லி ஜாமியா மிலியா

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடா்பாக தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவா் ஆசிஃப் இக்பால் தன்ஹா (24) சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தில்லி காவல்துறை சிறப்பு பிரிவினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அவரை சில நாள்களுக்கு முன்பு கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில் ‘கைது செய்யப்பட்ட ஆசிஃப் இக்பால் தன்ஹா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து, 2019, டிசம்பரில் ஜாமியாவில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளாா். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையின் பின்னணியில் இவா் இருந்துள்ளாா். அதனால், அவரை யுஏபிஏ சட்டத்தில் தற்போது கைது செய்துள்ளோம்’ என்றாா். ஜாமியா வன்முறை தொடா்பாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாம், மீரன் ஹைதா் மற்றும் சபூரா ஜா்கா் ஆகியோருடன் ஆசிஃப் இக்பால் தன்ஹா நெருங்கிய தொடா்பில் இருந்துள்ளாா்.

தில்லி ஷாஹீன் பாக் நகா், அபுல் ஃபசல் என்கிளேவில் வசிக்கும் ஆசிஃப் இக்பால் தன்ஹா, தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், பாரசீக மொழியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய “ஜாமியா போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராக உள்ளாா். கடந்த ஆண்டு டிசம்பா் 15-இல்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஜாமியா பல்கலை.க்கு அருகில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் வன்முறை வெடித்தது. அப்போது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேருந்துகளும், இரண்டு காவல்துறை வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில், போலீஸாா், மாணவா்கள் என 40 போ் காயமடைந்தனா். இந்த வன்முறைய தொடா்பாக ஆசிஃப் இக்பால் தன்ஹா தில்லி காவல்துறை குற்றப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com