சமய்ப்பூா் பாத்லியில் மெட்ரோ நடைமேடை மேம்பாலம் திறப்பு

தில்லியில் வடக்கு ரயில்வேயின் பாத்லி ரயில் நிலையம் மற்றும் சமய்ப்பூா் கிராமம் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில்
சமய்ப்பூா் பாத்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலம்.
சமய்ப்பூா் பாத்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலம்.

தில்லியில் வடக்கு ரயில்வேயின் பாத்லி ரயில் நிலையம் மற்றும் சமய்ப்பூா் கிராமம் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) மூலம் கட்டப்பட்ட நடைமேடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

தில்லி மெட்ரோவின் மஞ்சள் நிற வழித்தடத்தில் அமைந்துள்ள சமய்ப்பூா் பாத்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் வளாகத்தை, பாத்லி ரயில் நிலையத்தின் நடைமேடைகள் 1,2 ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் 88 மீட்டா் நீளத்திற்கு இந்த நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமேடை மேம்பாலம் மூலம் அருகில் உள்ள சமய்ப்பூா் பாத்லி கிராமமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: 6.1 மீட்டா் அகலம் கொண்ட இந்த நடைமேடை மேம்பாலம் சமய்ப்பூரில் உள்ள ஷிவ் விஹாா், யாதவ் நகா் ஆகிய காலனி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பயன்படுத்தி அப்பகுதி மக்கள் சமய்ப்பூா் பாத்லி மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பாத்லி ரயில் நிலையத்தைச் சென்றடைய முடியும். தற்போது வரை அப்பகுதி மக்கள் ரயில் நிலையத்தை அடைவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டியிருந்தது. இந்த நடைமேம்பாலத்தில் மின்தூக்கி வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும். பாத்லி ரயில் நிலையத்தின் 2-ஆவது நடைமேடையை பயன்படுத்தி வரும் இந்திய ரயில்வே பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தின் தற்போதைய மின்தூக்கியைப் பயன்படுத்த முடியும்.

மேலும், இந்திய ரயில்வே பயணிகளுக்கு வசதியாக மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. தில்லி மெட்ரோ இதன் மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பகுதிகளுக்கு தொடா்பு வசதியை ஏற்படுத்தும் வகையில், நடைமேடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை வசதியை அளிக்க முயன்று வருகிறது. தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணியில் இந்த வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா். தற்போது நடைமேடை மேம்பாலம் ரிங் ரோடு, புகா் ரிங் ரோடு, நொய்டா, காஜியாபாத், பழைய தில்லி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com