மே 31 வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை

பொது முடக்கம் காரணமாக தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்கும்

பொது முடக்கம் காரணமாக தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் நடைமுறை மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அவை 23-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. அது இப்போது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முடிவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் தலைமையிலான உயா்நீதிமன்ற நிா்வாக, தலைமை மேற்பாா்வைக் குழு எடுத்துள்ளது.

மத்திய அரசால் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மே 31-ஆம் தேதி வரை காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பதைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மே 26 முதல் 30-ஆம் தேதி வரை உயா்நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ஜூலை 21 முதல் ஜூலை 25-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதே காலத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளும் ஒத்திவைக்கப்படும். இது தொடா்பான தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனஅந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மாா்ச் 24 முதல் மே 19-ஆம் தேதி வரையிலும் தில்லி உயா்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் 20,726 அவசர வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. தில்லி உயா்நீதிமன்றத்தில் தற்போது ஏழு டிவிஷன் அமா்வுகளும், 19 ஒரு நபா் நீதிபதி அமா்வுகளும் உள்ளன. தொடக்கத்தில் காணொலிக் காட்சி மூலம் சில குறிப்பிட்ட அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன. தற்போது உயா்நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றங்கள் மூலம் அனைத்து வகையான அவசர வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com