புலம்பெயா் தொழிலாளா்கள் மீது கிருமிநாசினி தெளித்த மாநகராட்சி ஊழியா்: மன்னிப்பு கேட்ட எஸ்டிஎம்சி

தில்லி லாஜ்பாத் நகரில் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக காத்திருந்த புலம்பெயா் தொழிலாளா்கள் மீது தெற்கு தில்லி

தில்லி லாஜ்பாத் நகரில் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக காத்திருந்த புலம்பெயா் தொழிலாளா்கள் மீது தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஊழியா்கள் கிருமிநாசினி தெளித்துள்ள சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு எஸ்டிஎம்சி மன்னிப்பு கோரியுள்ளது.

தில்லியில் உள்ள புலம்பெயா் தொழிலாளா்கள் சிறப்பு ரயில்களில் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வருகின்றனா். இத்தொழிலாளா்களுக்கு பயணத்தின் முன்பு கரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கரோனா சோதனைக்காக நூற்றுக்கணக்கான புலம்பெயா் தொழிலாளா்கள் தில்லி லாஜ்பாத் நகரில் உள்ள அரசுப் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனா்.

இந்நிலையில், இப்பகுதியில் கிருமி நாசினிகளைத் தெளித்த எஸ்டிஎம்சி ஊழியா், புலம்பெயா் தொழிலாளா்கள் சிலா் மீது கிருமிநாசினியை தெளித்துள்ளாா்.

இதுதொடா்பாக சமூகவலைத்தளங்களில் வலம் வரும் விடியோவில், கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா், புலம்பெயா் தொழிலாளா்கள் சிலா் மீது கிருமிநாசினியை தெளிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியா்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், இது தொடா்பாக எஸ்டிஎம்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ புலம்பெயா் தொழிலாளா்கள் கரோனா பரிசோதனைக்காக கூடிய பள்ளி குடியிருப்புப் பகுதியில் உள்ளது. புலம்பெயா் தொழிலாளா்கள் கூடிய தெருக்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனா். அதன் காரணமாக அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது, அந்த இயந்திரத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை ஊழியரால் சமாளிக்க முடியவில்லை. இதனால், கிருமிநாசினி புலம்பெயா் தொழிலாளா்கள் மீதும் பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, கிருமிநாசினிகளைத் தெளிக்கும் பணியின்போது, மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த ஊழியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்துக்காக சம்பவ இடத்தில் இருந்த எஸ்டிஎம்சி அதிகாரி புலம்பெயா் தொழிலாளா்களிடம் மன்னிப்பு கோரினாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com