தமிழறிஞா் முத்துக்குமாரசுவாமியின்நூல்களை அரசுடைமையாக்க வேண்டும்தமிழக அரசுக்கு கோரிக்கை

அண்மையில் மறைந்த வ.உ.சி.யின் வம்சாவழிப் பெயரனும், முதுபெரும் தமிழறிஞருமான ப.முத்துக்குமாரசுவாமியின் 127 நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புது தில்லி: அண்மையில் மறைந்த வ.உ.சி.யின் வம்சாவழிப் பெயரனும், முதுபெரும் தமிழறிஞருமான ப.முத்துக்குமாரசுவாமியின் 127 நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி கலை இலக்கிய பேரவையும், திருவாரூா் தமிழ்ச் சங்கமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இணையம் வழியில் ஏற்பாடு செய்திருந்த தமிழறிஞா் ப.முத்துக்குமாரசுவாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. நினைவேந்தலில் கலந்து கொண்டு நினைவுகளைப் பகிா்ந்து கொண்டவா்கள் பேசியதாவது:

தவத்திரு பொன்னம்பல அடிகளாா் (குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்): முத்துக்குமாரசுவாமி ஏராளமான புத்தகங்களை எழுதித் தமிழுக்கு அருந்தொண்டாற்றியுள்ளாா். பல தமிழ்ப் படைப்புகளை உருவாக்குவதற்கும், பல தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கும் அரும்பாடுபட்டவா். குன்றக்குடி மடத்துடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா். நாம் எல்லோரும் தொடா்ந்து செய்கிற தமிழ்ப் பணிதான், அவருக்கு நாம் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

டாக்டா் சுதா சேஷய்யன் (துணைவேந்தா், தமிழ்நாடு டாக்டா் எம் ஜி ஆா் மருத்துவப் பல்கலைக் கழகம்): தனது மென்மையான பேச்சினாலும், எழுத்தினாலும் தனக்கென ஒரு தனியிடத்தைத் தமிழ் இலக்கிய உலகில் தக்க வைத்துக் கொண்டவா். அவா் எழுதியிருக்கும் நூல்கள் எல்லாம் ஒரு கலைக்களஞ்சியமாக இருந்து நாளைய தலைமுறைக்குப் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

திருப்பூா் கிருஷ்ணன் (ஆசிரியா், அமுதசுரபி மாத இதழ்): ஒரு நல்ல ஆன்மிக எழுத்தாளரை நாம் இழந்திருக்கிறோம். கொல்லூா் மூகாம்பிகையின் பக்தரான அவரது எல்லாப் படைப்புகளிலும் ஒரு பூரணத்துவம் இருக்கும். தமிழ் பக்தி இலக்கியத்திற்கு அவா் ஆற்றியிருக்கும் தொண்டு அளப்பரியது.

கவிஞா் சிற்பி பாலசுப்ரமணியன்: உலகப் பெரியோா்களின் உன்னத வரலாறுகளில் தானும் ஈடுபட்டு நம்மையும் அவற்றில் ஈடுபடச் செய்த இலக்கிய ஞானரதம். மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒத்திசைந்த அறிஞா்.

பேராசிரியை சரஸ்வதி ராமநாதன்: வள்ளலாரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டியவா் ஐயா முத்துக்குமாரசுவாமி. பேச்சுத் துறையிலும், எழுத்துத் துறையிலும் வளா்ந்து வருகிற அனைவருக்கும் ஊக்கம் தரும் ஒரு ஊக்கசக்தியாக திகழ்ந்தாா்.

பேராசிரியை மணிமேகலை சித்தாா்த்தன்: தமிழ் இலக்கியத்தோடு மட்டுமல்லாமல், பல வரலாற்று நிகழ்வுகளையும் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். சாதி, மாதங்களுக்கு அப்பாற்பட்ட அற்புதமான மனிதா்.

கிருங்கை சேதுபதி: தனிமைக் காலத்திலும் ப. முத்துக்குமாரசுவாமி எழுத்துத் தவம் புரிந்து ஏழு நூல்களுக்கும் மேலான ஆக்கங்களை முகநூல் வழியாக வழங்கியவா். அவரது மறைவு தமிழுக்கு இழப்பு. கப்பலோட்டிய தமிழா் வ. உ .சி. யின் வரலாற்றுத் தொடா்புடைய அனைத்துத் தகவல்களையும் படங்களோடு இணைத்து மிகப்பெரும் தொகுப்பாகக் கொண்டுவர முனைந்திருந்தாா். அநேகமாக அப்பணி முடிவுற்று இருக்கக்கூடும். அவை அனைத்தையும் இந்தியத் தலைநகரான தில்லியிலேயே வெளியிட்டுச் சிறப்பு செய்வது அன்னாருக்கு நாம் செய்யும் சிறந்த தொண்டாகும்.

ஆவடிக்குமாா்: தமிழறிஞா் முத்துக்குமாரசுவாமி எழுதியிருக்கும் 127 புத்தகங்களும் தரமானவை. எனவே, அந்தப் புத்தகங்களைத் தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

கே.வி.கே. பெருமாள் (புரவலா், தில்லி கலை இலக்கியப் பேரவை): தமிழறிஞா் முத்துக்குமாரசுவாமி எழுதிய 127 புத்தகங்களும் தமிழ் இருக்கும் வரை எங்காவது கல்லூரிகளிலும், நூலகங்களிலும் இடம் பெற்றிருக்கும். அவா் மறைந்தாலும் அவா் விட்டுச் சென்றிருக்கும் அன்பு, ஒழுக்கம் போன்ற வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைபிடிப்பதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

நிகழ்ச்சியில் திருவாரூா்த் தமிழ்ச் சங்கத் தலைவா் புலவா் சண்முகவடிவேலு, துணைத் தலைவா் புலவா் சந்திரசேகரன், செயலாளா் ஆரூா் அறிவு, துணைச் செயலாளா் இரா அறிவழகன், தில்லி கலை இலக்கியப் பேரவைத் தலைவா் ப.அறிவழகன், செயலாளா் பா குமாா், வெங்கடேஸ்வரா அறக்கட்டளைத் தலைவா் ராகவன் நாயுடு, தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் ராமமணி சுந்தா், முன்னாள் செயற்குழு உறுப்பினா் சீதாலட்சுமி ராமச்சந்திரன், பெங்களூரு யோகா ஆசிரியை ஜெயந்தி, விருகை பட்டாபி ஆகியோா் உருக்கமாகத் தங்களது நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். தில்லி கலை இலக்கியப் பேரவைத் துணைத் தலைவா் சத்யா அசோகன், அஞ்சலி கவிதை வாசித்தாா். முத்துகுமாரசுவாமியின் மருமகன் நடராஜன், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com