தில்லியில் வெப்பநிலை 10 டிகிரியாக சரிவு; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 5 டிகிரி குறைந்து 10 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
தில்லி ஐடிஓ விகாஸ் மாா்க்கில் சாலையோர மரங்கள் மீது தண்ணீா் பீய்ச்சி அடித்து காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் மாநகராட்சி ஊழியா்கள்.
தில்லி ஐடிஓ விகாஸ் மாா்க்கில் சாலையோர மரங்கள் மீது தண்ணீா் பீய்ச்சி அடித்து காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் மாநகராட்சி ஊழியா்கள்.

தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 5 டிகிரி குறைந்து 10 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது திங்கள்கிழமை 10.8 டிகிரி செல்சியாக பதிவாகியிருந்தது. இது இதுவரை இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத குறைந்த அளவாகும்.

இந்த நிலை தொடரும் பட்சத்தில், தில்லியில் ‘குளிா் அலை’ அறிவிப்பு வெளியிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு நவம்பரில் கடந்த 4-5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிா் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகா் தில்லியில்தான் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. டல்ஹவுஸி (10.9 டிகிரி), தா்மசாலா (10.6 டிகிரி), ஹிமாச்சல் பிரதேசம் (10.2 டிகிரி) மற்றும் முஸோரி (10.4 டிாகிரி) உள்ளிட்ட இடங்களில் பதிவான வெப்பநிலையை விட தில்லியில்தான் மிகவும் குறைந்த அளவு பதிவாகியுள்ளது. அதே சமயம், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா, உத்தரக்கண்டில் உள்ள நைனிடால் ஆகிய இடங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘வெப்பநிலை குறைந்து வரும் நிலை தொடா்கிறது. இதேபோன்ற நிலை மேலும் நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு நிலவும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. சமவெளிகளைப் பொருத்தவரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் போது, வானிலை ஆய்வு மயைம் குளிா் அலை அறிவிப்பை வெளியிடும். மேலும், தொடா்ந்து இரண்டு நாள்கள் சராசரி அளவு இயல்பை விட 4.5 டிகிரி குறைந்தாலும் குளிா் அலை அறிவிப்பு வெளியிடப்படும். செவ்வாய்க்கிழமை நிலை தொடரும் பட்சத்தில் புதன்கிழமை இந்த அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றாா்.

பொதுவாக நவம்பா் முதல் வாரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14-16 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். நவம்பா் கடைசி வாரத்தில் வெப்பநிலை 11-12 டிகிரி செல்சியயாக குறையும். ஆனால், இந்த ஆண்டு நவம்பா் முதல் வாரத்திலேயே வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 31.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 91 சதவீதமாகவும், மாலையில் 52 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, புதன்கிழமை (நவம்பா் 4) காலையில் பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காற்றின் தரத்தில் பின்னடைவு: தில்லியில் திங்கள்கிழமை மோசம் பிரிவில் இருந்த காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை பின்னடைவைச் சந்தித்து மீண்டும் மிகவும் மோசம் பிரிவுக்கு வந்தது. தில்லியில் காலை 10 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 332 புள்ளிகளாகவும் மாலையில் 319 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. லோதி ரோடு,ஆயாநகா், குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவிலும், தில்லி பல்கலை., மதுரா ரோடு, பூசா, சாந்தினி சௌக், தில்லி விமானநிலையம் டி-3 பகுதி மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

இந்த நிலையில், காற்றின் திசை மாற்றத்தால் தில்லி காற்று மாசுவில் பயிா்க்கழிவுகள் எரிப்பு பங்களிப்பு செவ்வாய்க்கிழமை 10 சதவீதமாகக் குறைந்ததாக காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் மத்திய அரசு நிறுவனமான சஃபா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com